ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை 6வது இடத்துக்கு ரகானே முன்னேற்றம்: வில்லியம்சன் நம்பர் 1

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் அஜிங்க்யா ரகானே 6வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். மெல்போர்ன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடி சதம் விளாசியதுடன் ஆட்ட நாயகன் விருதையும் கைப்பற்றிய ரகானே, டெஸ்ட் தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி 6வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு  அக்டோபரில் அவர் 5வது ரேங்க் வரை முன்னேறியதே சிறந்த செயல்படாக உள்ளது. ஆஸி.க்கு எதிராக எஞ்சியுள்ள 2 டெஸ்டிலும் கணிசமாக ரன் குவித்தால் டாப் 5ல் இடம் பிடித்து அசத்தலாம். பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் விளாசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 2 இடங்கள் முன்னேறி நம்பர் 1 அந்தஸ்தை கைப்பற்றி உள்ளார். அவர் 2015ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் முதலிடத்துக்கு  முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் 2 இடங்கள் பின்தங்கி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி 2வது இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா 2 இடம் பின்தங்கி 10வது இடத்தில்  உள்ளார்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய சுழல் நட்சத்திரம் ஆர்.அஷ்வின் 2 இடம் முன்னேறி 7வது இடத்தையும், வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பூம்ரா 1 இடம் முன்னேறி 9வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஆஸி. வேகம் ஸ்டார்க் டாப்  5ல் இடம் பிடித்துள்ளார்.

Related Stories: