திருப்பதி மலைத்தொடருக்கு உட்பட்ட அஞ்சனாத்ரியில் ஆஞ்சநேயர் சுவாமி அவதரித்தாரா?

திருமலை: திருப்பதி சேஷாசல மலைத்தொடருக்கு உட்பட்ட அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் சுவாமி அவதரித்தாரா? என ஆய்வு நடத்தும்படி ஆகம ஆலோசனை குழுவுக்கு தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள சேஷாசல மலைத்தொடரில் சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, நாராயணாத்ரி, விருஷபாத்ரி, கருடாத்ரி, வேங்கடாத்ரி, நீலாத்ரி ஆகிய 7 மலைகள் உள்ளன. எனவே தான் இந்த சேஷாசலம் மலைப்பகுதிக்கு ஏழுமலை என்ற பெயர் வந்தது. இங்கு மகாவிஷ்ணுவின் கலியுக அவதாரமான வெங்கடேஸ்வர சுவாமி எழுந்தருளியுள்ளதால் அவருக்கு ஏழுமலையான் என்ற பெயரும் பக்தர்களால் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனாதேவி நீண்ட காலம் கடும் தவமிருந்து திருமலையில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் இருக்கும் ஆகாச கங்கையில் நீராடினார். அதன் பயனாக ஜபாலி எனும் இடத்தில் ஆஞ்சநேயரை மகனாக பெற்றார் என்று புராணங்கள் கூறுகிறது.

ஏற்கனவே அஞ்சனாத்ரி மலையில் பக்தர்கள் பாத யாத்திரை செல்லும் பகுதியில் மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலை வைத்து பூஜைகள் நடந்து வருகிறது. மேலும் அடர்ந்த வனப்பகுதியான ஜபாலியில் ஆஞ்சநேயர் கோயிலும் உள்ளது. எனவே திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஜபாலி என்னும் இடத்தில் ஆஞ்சநேயர் அவதரித்தாரா? என ஆய்வு மேற்கொள்ளும்படி கோயில் ஆகம ஆலோசனை குழுவிற்கு திருப்பதி தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. ஆகம குழுவின் ஆய்வு மூலம் ஆஞ்சநேயரின் அவதார திருத்தலம் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலைதான் என்று உறுதியானால் அங்கு ஆஞ்சநேயருக்கு பிரமாண்டமான கோயில் கட்ட தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இதனால் திருமலையின் பெருமை மேலும் அதிகரிக்கும்.

ராமபிரானுக்கு நீண்டகால தடைகளைத் தாண்டி அவருடைய அவதார திருத்தலமான அயோத்தியில் கோயில் கட்ட பணிகள் தொடங்கியுள்ளதைப்போல், ராமரின் பாசத்துக்குறிய ஆஞ்சநேயருக்கும் அவதார திருத்தலத்தில் கோயில் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: