நவம்பரில் திரையரங்குகள் திறக்கப்படுமா?: வரும் 28-ம் தேதி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.!!!

சென்னை: கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஏழு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் திரைத்துறைப் பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆனால் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் படங்களை வெளியிடமுடியாத சூழல் நிலவுகிறது. இருப்பினும், திரையரங்குகள் திறப்பது குறித்து மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் தமிழகத்தில் திறக்கப்படவில்லை.

இதற்கிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாயார் தவுசாயம்மாள் கடந்த 12ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையொட்டி நேற்று சென்னையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் திரையங்கு உரிமையாளர்கள் தவுசாயம்மாளின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, முதல்வர் பழனிசாமிக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க கவுரவ தலைவர் அபிராமி இராமநாதன் மற்றும் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட திரையரங்கு உரிமையாளர்கள் ஆயுதபூஜைக்கே (அக்டோபர் 25 வரும் ஞாயிற்றுக்கிழமை) தியேட்டர்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

அதில் மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் திரையரங்குகளில் ஒரு நாளைக்கு 4 காட்சிகள் என்பதற்கு பதிலாக கூடுதல் காட்சிகளை திரையிட அனுமதிக்க வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை என்பதற்கு பதிலாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தியேட்டர்களை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும், உரிமம் பெற பொதுப்பணித்துறை இடமே அனுமதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் முதல்வரிடம் வலியுறுத்தினர்.

இந்நிலையில், தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது தொடர்பாக வரும் 28-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இதன் மூலம் ஆயுதபூஜை விடுமுறையில் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இல்லை. இருப்பினும், நவம்பர் முதல் வாரத்தில் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: