கனமழையும் இருக்கு… வெப்ப அலையும் இருக்கு!.. அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.. 7ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° முதல் 4° செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும், 6ம் தேதி வரை ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னையில் 40 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரிக்கும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதே வேளை இன்று முதல் 6-ம் தேதி வரை வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 111 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் 102 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூரில் மே 7-ல் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அப்போது மணிக்கு 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்றுடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என்ற குளு குளு அறிவிப்பையும் வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதே போல், மே 8, 9 தேதிகளில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே அடுத்த 3 நாட்கள் உள் மாவட்டங்களில் அதிக வெப்பம் நிலவும்; அதற்கு அடுத்த 2 தினங்களில் வெப்பம் படிப்படியாக குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post கனமழையும் இருக்கு… வெப்ப அலையும் இருக்கு!.. அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.. 7ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: