காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!

விருதுநகர் : காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம் ஆகி உள்ளது. வெடிமருந்து கிடங்கில் 1,500 கிலோ மட்டுமே இருப்பு வைக்க அனுமதி உள்ள நிலையில் 2 டன்னுக்கும் மேல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கீழஉப்பிலிக்குண்டு கிராமத்தில் கல்குவாரி உள்ளது. குவாரியின் குடோனில் இருந்து சரக்கு வாகனங்களில் வெடிமருந்து ஏற்றும் பணி நடந்தது. அப்போது ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகினர். இதுகுறித்து ஆவியூர் போலீசார் கல்குவாரி உரிமையாளர் சேதுராமன், வெடிமருந்து குடோன் உரிமையாளர் சங்கரன்கோவிலை சேர்ந்த ராஜ்குமார் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், ஆவியூர் குவாரி வெடிவிபத்து நடந்த இடத்தில் இருந்து முதற்கட்டமாக 2,150 கிலோ வெடிமருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

வெடி விபத்தில் வெடித்து சிதறியது போக மீதம் இருந்த வெடி மருந்துகள் ஒரு வேனில் 1300 கிலோவும் 2வது வேனில் 950 கிலோ என மொத்தம் 2,150 கிலோ கைப்பற்றப்பட்டது. இந்த வெடி மருந்துகள் 2 சரக்கு வாகனங்களில் காரியப்பட்டி வட்டாட்சியர் மாரீஸ்வரன், அருப்புக்கோட்டை துணை கண்காணிப்பாளர் காயத்ரி தலைமையில் பந்தல்குடியில் உள்ள தனியார் வெடி மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்க எடுத்துச் செல்லப்பட்டது. இதனிடையே வெடிவிபத்து நடந்த இடத்தில் சிதறிக் கிடக்கும் வெடி பொருட்களை சேகரிக்கும் பணி 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. சிதறி கிடக்கும் வெடிமருந்து பொருட்களை முழுமையாக எடுத்த பின்னர் பாதுகாப்பான இடத்தில் வைத்து வெடிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

The post காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!! appeared first on Dinakaran.

Related Stories: