ராஜீவ் காந்தி குறித்த விமர்சன விவகாரம்; பிரதமர் மோடியால் புரிந்துகொள்ள முடியாது: தியாகம் குறித்து பிரியங்கா உருக்கம்


மொரேனா: ராஜீவ் காந்தி குறித்த விமர்சன விவகாரத்தில் மோடியால் தியாகத்தை புரிந்து கொள்ள முடியாது என்று பிரியங்கா காந்தி உருக்கத்துடன் கூறினார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனாவில் நடந்த பேரணியில் பேசுகையில், ‘‘எனது தந்தை தனது தாயிடம் இருந்து வாரிசு உரிமையாக சொத்தை பெறவில்லை. மாறாக உயிர் தியாகம் செய்வதை தான் தனது தாயிடம் இருந்து வாரிசு உரிமையாக அவர் பெற்றுக்கொண்டார். என்னுடைய தாயின் வாரிசுரிமை பெறுவதற்காக, எனது தந்தை சில சட்டங்களை மாற்றியதாக மோடி கூறுகிறார்.

என் தந்தைக்கு வாரிசு சொத்து இல்லை என்பதை மோடியால் புரிந்து கொள்ள முடியாது. என் தந்தை மரபுரிமையாக தியாகம் செய்தார். என் தந்தையை துரோகி என்று மோடி கூறுகிறார். அவர்கள் தியாகத்தை புரிந்து கொள்ள மாட்டார்கள்; ஆனால் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். நீங்கள் இந்த நாட்டின் விவசாயிகள் என்பதால், உங்களின் வியர்வையை நிலத்தில் பாய்ச்சியுள்ளீர்கள். தியாகம் என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். என்னுடைய தந்தைக்கு (ராஜீவ் காந்தி) கிடைத்தது சொத்து அல்ல; தியாகத்தின் ஆத்மா; உங்கள் (வாக்காளர்கள்) மகன்களை எல்லைக்கு அனுப்பியதால், இந்த உணர்வை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

இந்த உணர்வை மோடியால் புரிந்து கொள்ள முடியாது. எனக்கு 19 வயதாக இருந்தபோது, ​​எனது தந்தையின் உடல் துண்டுகளை வீட்டிற்கு கொண்டு வந்தேன். அப்போது எனக்கு கோபம் இருந்தது. பிறகு மெல்ல மெல்ல புரிந்து கொண்டேன். இன்று எனக்கு 52 வயதாகிறது. என்னுடைய தேசத்தின் மீது எனக்கு அன்பு இருக்கிறது’ என்றார்.

The post ராஜீவ் காந்தி குறித்த விமர்சன விவகாரம்; பிரதமர் மோடியால் புரிந்துகொள்ள முடியாது: தியாகம் குறித்து பிரியங்கா உருக்கம் appeared first on Dinakaran.

Related Stories: