வாட்சன் 42, ராயுடு 41 ரன் விளாசல் சன்ரைசர்சுக்கு 168 ரன் இலக்கு

துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 168 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் ஜெகதீசனுக்கு பதிலாக பியுஷ் சாவ்லா இடம் பெற்றார். ஐதராபாத் அணியில் அபிஷேக் ஷர்மாவுக்கு பதிலாக ஷாபாஸ் நதீம் சேர்க்கப்பட்டார். தொடர்ச்சியான தோல்விகளால் தனது அணியை ஓட்டை கப்பல் என வர்ணித்திருந்த தோனி, ஓட்டையை அடைக்கும் முயற்சியாக தொடக்க ஜோடியை மாற்றினார்.

சாம் கரன், டு பிளெஸ்ஸி இருவரும் இன்னிங்சை தொடங்கினர். இந்த வியூகம் பெரிதாக கை கொடுக்கவில்லை. முதல் 2 ஓவரையும் சாம் கரன் எதிர்கொண்ட நிலையில், 3வது ஓவரின் முதல் பந்தை சந்தித்த டு பிளெஸ்ஸி டக் அவுட்டாகி வாத்து நடை போட்டார். துடிப்புடன் விளையாடிய சாம் கரன் 31 ரன் விளாசி (21 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) சந்தீப் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். சிஎஸ்கே 4.4 ஓவரில் 35 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறிய நிலையில், வாட்சன் - ராயுடு ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தது. அவ்வப்போது பந்தை பவுண்டரி, சிக்சருக்கு விரட்டிய இருவரும் பெரிய ஸ்கோர் அடிக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தினர். எனினும், ராயுடு 41 ரன் (34 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), வாட்சன் 42 ரன் (38 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழந்தது சென்னை அணியின் ஸ்கோர் வேகத்துக்கு பிரேக் போட்டது.

இந்த நிலையில், கேப்டன் தோனி - ஜடேஜா இணைந்து அதிரடியாக ரன் சேர்த்தனர். தோனி 21 ரன் (13 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி நடராஜன் வேகத்தில் வில்லியம்சன் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த பிராவோ கடைசி ஓவரின் முதல் பந்திலேயே முட்டை போட்டு நடையை கட்டினார். கலீல் வீசிய அந்த ஓவரில் ஜடேஜா ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க சிஎஸ்கே 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன் குவித்தது. ஜடேஜா 25 ரன் (10 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), தீபக் சாஹர் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் சந்தீப், கலீல், நடராஜன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் களமிறங்கியது. கேப்டன் வார்னர், ஜானி பேர்ஸ்டோ இருவரும் துரத்தலை தொடங்கினர்.

Related Stories: