ஒட்டன்சத்திரம் அருகே வீட்டை சூறையாடியது காட்டுயானை

ஒட்டன்சத்திரம்:  ஒட்டன்சத்திரம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானை வீட்டை சூறையாடியது. இதில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு ஊராட்சி, சிறுவாட்டுகாடு மலைக்கிராமத்தை சேர்ந்தவர் பிரபா.  ஊராட்சி மன்ற துணைத்தலைவராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். நள்ளிரவில் சிறுவாட்டுக்காடு பகுதியில் புகுந்த யானை, பிரபாவின் வீட்டை சூறையாடியது. இதில் வீட்டிலிருந்த பீரோ, கட்டில், மெத்தை உள்ளிட்ட சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகின.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த யானை, பெத்தேல்புரம் அரசு பள்ளியில் இருந்த தென்னை மரம், காம்பவுண்ட் சுவர், கூரை ஆகியவற்றை சேதப்படுத்தியது. மேலும் இரவு நேரங்களில் இந்த யானை சாலைகளில் உலா வந்து, வாகனங்களில் வருபவர்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே வனத்துறையினர் யானையை காட்டுப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குட்டி இறந்ததால் கோபம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு பரப்பலாறு அணையில் குட்டியானை ஒன்று இறந்து கிடந்தது. இதனால் கோபம் கொண்ட தாய் யானை சமீபகாலமாக ஊருக்குள் வந்து, பொருட்களை சேதப்படுத்தி வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related Stories: