கர்நாடகாவில் இனி ஊரடங்கு கிடையாது: முதல்வர் எடியூரப்பா அதிரடி அறிவிப்பு

பெங்களூரு: ‘‘பெங்களூரு உள்பட கர்நாடகாவில் எங்குமே இனிமேல் ஊரடங்கு கிடையாது,’’ என்று முதல்வர் எடியூரப்பா கூறினார். பெங்களூருவில் கடந்த வாரம்  முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மிகவும் அவசிய தேவைகளுக்கு  மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்ற உத்தரவுடன் கொரோனா ஹாட் ஸ்பாட் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் மக்களின் நடமாட்டம் தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்த நிலையில் பெங்களூருவில் முழு ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கையை எடியூரப்பா ஏற்கவில்லை.

எடியூரப்பா நேற்று முகநூலில் நேரலையில் பேசியதாவது:

கொரோனா பரவலை தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால், மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகாவில் இனிமேல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படாது. கொரோனா பாதிக்காத வகையில் முகக்கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்தால் நம்மால் வெற்றி பெற முடியும். கொரோனா பரவிய கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடுமையான விதிகள் அமல்படுத்தப்படும். 100 சதவீதம் யாரும் வெளியே வராத வகையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்படும்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் டாக்டர்கள், நர்ஸ், போலீசார் உள்ளிட்டோர் பகல் இரவு பாராமல் தீவிரமாக உழைக்கின்றனர். பொதுமக்கள் இதை உணர்ந்து கொண்டு அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.  வயதான நபர்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் அவசியத் தேவை இருந்தால் அன்றி வீட்டை விட்டு வெளியே  வரக்கூடாது. பெங்களூருவில் இன்று முதல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* ‘5 டி’ யுக்தி அமல்

எடியூரப்பா மேலும் கூறுகையில், ‘‘கொரோனாவை கட்டுப்படுத்த, ‘5 டி’ யுக்தி உடனடியாக அமல்படுத்தப்படும். முதல் ‘டி’ கொரோனா நோயாளிகளை அடையாளம் காண்பது, 2வது ‘டி’ நோயாளிகளின் பயண வரலாற்றை குறிக்கிறது. மற்ற ‘டி’க்கள் பரிசோதனை, சிகிச்சை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை அறிவுறுத்துகிறது,’’ என்றார்.

Related Stories: