மீண்டும் சர்ச்சையை கிளப்பும் நேபாளம் எங்கள் ஊரில்தான் ராமர் அவதரித்தார்: அகழாய்வு மூலம் நிரூபிக்க முடிவு

காத்மாண்டு:  ராமர் பிறந்த அயோத்தி நகரம், தங்கள் நாட்டில் இருப்பதாக நேபாள பிரதமரின் சமீபத்திய அறிவிப்பு, இந்தியாவில் கடுமையான சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே, ராமரின் பிறப்பிடம் குறித்த உண்மைநிலை அறிவதற்காக தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ள நேபாள அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி, இந்து கடவுளான ராமர் அவதரித்த இடம் என இந்துக்களால் நம்பப்படுகிறது. இந்நிலையில், ராமர் பிறந்த அயோத்தி நகரம் இருப்பது நேபாள நாட்டின் எல்லையோர நகரமான பிர்கஞ்ச் அருகேயுள்ள தோரி கிராமத்தின் அருகே இருக்கிறது என்று நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இவரது இந்த அறிவிப்பு இந்தியாவில் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் உண்மைநிலை அறிவதற்காக தோரி பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள நேபாள அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தோரியில் புராதன, தொன்மையான இந்து மதம் சார்ந்த வரலாற்று சின்னங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.  இதனால், நேபாள நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளும், ஆன்மிகவாதிகளும் தோரி பகுதிக்கு அதிகளவில் படையெடுத்து வருகின்றனர். தோரி பகுதியில் நடக்கவுள்ள அகழாய்வு தொடர்பாக பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களின் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொல்லியல்துறை செய்தித்தொடர்பாளர் ராம்பகதூர் கன்வார் தெரிவிக்கிறார்.

நேபாள நாட்டின் வரலாற்று ஆய்வாளர் ஜக்மன் குரூங் இதுகுறித்து கூறுகையில், ‘‘வால்மீகி ராமாயணத்தை, அது குறிப்பிடும் புவியியல் நில அடிப்படையில் பார்க்கும் போது ராமர் பிறந்ததாக கூறப்படும் அயோத்தி என்பது, நேபாளத்தின் ஜனக்பூர் அருகில் இருந்திருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். இந்தியாவில் தற்போதுள்ள அயோத்தியில் இருந்து சாரட் வாகனம் மூலம் ஜனக்பூர் செல்ல 7 நாட்களாவது ஆகும். ஆனால், ராமாயணத்தில் ராமர், ஜனக்பூருக்கு ஒரே நாளில் சென்றதாக கூறப்படுகிறது. இது எப்படி சாத்தியம்? ஆகவே, புராதன நகரமான அயோத்தியின் உண்மையான இருப்பிடம் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

ராமரிடம் பிறப்பிடம் குறித்த நேபாள பிரதமரின் கருத்திற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால், நேபாள பிரதமரின் கருத்து யாருடைய உணர்வையும் புண்படுத்தும் வகையானது அல்ல என்று அந்நாட்டு நாட்டின் வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது. அதேசமயம், இந்தியாவின் பழமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகம் நன்கறியும் என இந்தியா தரப்பில்  பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

மொட்டையடித்த விஎச்எஸ்

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் விஸ்வ இந்து சேனா அமைப்பினர் ஒரு நேபாள நாட்டவரைப் பிடித்து அவரது தலையை மொட்டையடித்துள்ளனர். நேபாள பிரதமருக்கு எதிராக கோஷமிடவும், ஜெய் ராம் என்று முழக்கமிடவும் கட்டாயப்படுத்தியுள்ளனர். அந்த அமைப்பின் தலைவர் அருண் பதக் இதுதொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரவவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உரிய கவனம் செலுத்த வேண்டுமென நேபாள தூதர் நிலாம்பர் ஆச்சார்யா வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: