மத்தியப் பிரதேசத்தில் செய்ததையே இங்கும் செய்ய பாஜக விரும்பியது...ஆனால் அது இங்கு எடுபடவில்லை: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேட்டி

ஜெய்ப்பூர்: மத்தியப் பிரதேசத்தில் செய்ததையே இங்கும் செய்ய பாஜக விரும்பியதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் தொடர்ந்து 2வது நாளாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திலும் சச்சின் பைலட் பங்கேற்கவில்லை. இதைத் தொடர்ந்து சச்சின் பைலட்டை நீக்குவது குறித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்தும், ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல்வர் அசோக் கெலாட் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கெலாட் , மத்தியப் பிரதேசத்தில் செய்ததையே இங்கும் செய்ய பாஜக விரும்பியது. ஆனால் பாஜகவின் நோக்கங்கள் இங்கு எடுபடவில்லை.

சச்சின் பைலட், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ,க்களுக்கு போதிய அளவில் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், திங்கள் மற்றும் செவ்வாயன்று நடைபெற்ற காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்கவில்லை. சச்சின் பைலட் கையில் எதுவும் இல்லை. பாஜகவின் கரங்களில் அவர் சரண் புகுந்தார். அனைத்து ஏற்பாடுகளையும் பாஜகதான் செய்கிறது. குதிரைப் பேரம் நடைபெறுவது வருத்தமளிக்கிறது. நாட்டில் ஜனநாயகம் மிகவும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. போர்க்கொடி உயர்த்தியவர்களின் கோரிக்கைக்ள் அனைத்தையும் அவசரம் அவசரமாக நிறைவேற்றினோம். அவர்கள் வேலை முடிந்து விட்டது. ஆனாலும் அவர்கள் ஆட்சியைக் கவிழ்க்க திட்டமிடுகிறார்கள், என கூறியுள்ளார்.

Related Stories: