உபியில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற விவகாரம் தாதா விகாஷ் துபேயின் கூட்டாளி சுட்டுக்கொலை

கான்பூர்: உத்தர பிரசேதத்தை சேர்ந்தவன் விகாஷ் துபே. பிரபல தாதாவான இவன் மீது உபி,யில் கொலை, கொள்ளை, கடத்தல் உட்பட 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு, இவன் கான்பூரில் உள்ள பிக்ரு கிராமத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, அப்பகுதிக்கு போலீஸ் படை விரைந்தது. ஆனால், அவர்கள் வருவது பற்றி உள்ளூர் போலீஸ் அதிகாரி முன்கூட்டியே தகவல் கொடுத்து விட்டதால், துபேயின் கூட்டாளிகள் துப்பாக்கிகளுடன் தயார்நிலையில் காத்திருந்தனர். போலீஸ் படை கிராமத்துக்குள் நுழைந்ததும் துபேயின் கும்பல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.  இதில், டிஎஸ்பி உட்பட 8 போலீசார் கொல்லப்பட்டனர். இது, தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக, விகாஷ் துபே மற்றும் அவனுடைய கூட்டாளிகள் 21 பேர் மீதும், அடையாளம் தெரியாத மேலும் 60 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பதுங்கி இருக்கும் விகாஷ் துபேயின் கூட்டத்தை தனிப்படை போலீசார் விரட்டி விரட்டி வேட்டையாடி வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமையே இவனுடைய 2 கூட்டாளிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். கடந்த 5 நாட்களில் ஸ்யாம்ஜி பாஜ்பாய் என்பவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் பாஜ்பாய் துப்பாக்கிசூடு நடத்தி பிடிக்கப்பட்டதில் காயம் அடைந்துள்ளான். இந்நிலையில், உபி.யின் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள மதகா கிராமத்தில் விகாஷ் துபேயின் நெருங்கிய கூட்டாளியான அமர் துபே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்த போது, அவர்கள் மீது ரவுடிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசார் நடத்திய பதில் தாககுதலில் அமர் துபே காயமடைந்தான்.

அவனை போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவன் இறந்தான். அவனுடன் இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சண்டையில் ஒரு இன்ஸ்பெக்டரும், போலீஸ்காரரும் காயமடைந்தனர். இதுவரை, விகாஷ் துபேயின் கும்பலை சேர்ந்த 3 ரவுடிகளை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். 10க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். இதேபோல், அரியானா மாநிலம், பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள கேரிபூரில் பதுங்கி இருந்த விகாஷ் துபேயின் கூட்டாளிகள் 3 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

* விகாஷ் துபேயை பிடிப்பதற்கான தகவலை கொடுப்பவர்களுக்கு உத்தர பிரதேச போலீசார் ரூ. 2.5 லட்சம் பரிசு அறிவித்து இருந்தனர், நேற்று இது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.

Related Stories: