தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் ரூ.3,112 கோடி பாஜக வசூல்: மொத்த தொகையில் 82 சதவீதம் பாஜகவுக்கே வழங்கல்: ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்

 

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நிதியில் 82 சதவீதம் பாஜக வசமாகியுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் கடந்த 2024ம் ஆண்டு ரத்து செய்தது. அந்தத் திட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது காசோலைகள் மற்றும் இணையவழி பரிவர்த்தனைகள் மூலம் மட்டுமே எந்தவொரு நிறுவனங்களும் அரசியல் கட்களுக்கும் நிதியளிக்க முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டது.

இந்தத் தடை அமலுக்கு வந்த பிறகு முதல் நிதியாண்டான 2024-2025ல், பதிவு செய்யப்பட்ட ஒன்பது தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் மொத்தம் 3,811 கோடி ரூபாய் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் வழங்கப்பட்ட 1,218 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், இந்த தொகையானது 200 சதவீதத்திற்கும் அதிகமாகும் என்று தேர்தல் ஆணைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, மொத்த நன்கொடையில் ஐந்தில் நான்கு பங்கு அதாவது 82 சதவீதம் ஆளும் பாஜகவுக்கு சென்றுள்ளது. அக்கட்சிக்கு மட்டும் 3,112 கோடி ரூபாய் கிடைத்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு வெறும் 299 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. இது மொத்த நிதியில் 8 சதவீதத்திற்கும் குறைவானதாகும்.

மீதமுள்ள தொகையே மற்ற கட்சிகளுக்குப் பிரித்தளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ‘புரூடென்ட்’ தேர்தல் அறக்கட்டளை மூலம் 2,668 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 2,180 கோடி ரூபாய் பாஜகவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஜிண்டால் ஸ்டீல், ஏர்டெல், அரவிந்தோ பார்மா போன்ற பெரு நிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெற்று, காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்குச் சிறிதளவு வழங்கிவிட்டு, பெரும்பகுதியை பாஜகவிற்கு இந்த அறக்கட்டளை வழங்கியுள்ளது.

டாடா குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெறும் ‘புரோகிரசிவ்’ தேர்தல் அறக்கட்டளை, தனது மொத்த நன்கொடையான 914 கோடியில் 80 சதவீதத்தை பாஜகவிற்கு வழங்கியுள்ளது. டாடா சன்ஸ், டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த அறக்கட்டளை மூலம் நிதியளித்துள்ளன. மகிந்திரா குழும நிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெற்ற ‘நியூ டெமாக்ரடிக்’ அறக்கட்டளை, திரட்டிய 160 கோடி ரூபாயில் 150 கோடி ரூபாயை பாஜகவிற்கே வழங்கியுள்ளது.

அதேவேளையில் மும்பையைச் சேர்ந்த கேஇசி இன்டர்நேஷனல் நிறுவனம் ‘ஜன் பிரகதி’ அறக்கட்டளை மூலம் வழங்கிய ஒரு கோடி ரூபாய் முழுவதும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிரிவுக்குச் சென்றுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் யார் நிதியளித்தார்கள் என்பது ரகசியமாக இருந்த நிலையில், தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் வழங்கப்படும் நிதி விவரங்கள் வெளிப்படையானவை ஆகும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்துக் கட்சிகளும் தங்களுக்குக் கிடைத்த நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: