காங்கிரஸ் கமிட்டி தலைவராக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்க எந்தவித தடையும் இல்லை: முதல்வர் எடியூரப்பா

மைசூர்: கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமாரிடம் பதவியேற்பு விழா குறித்து முதல்வர் எடியூரப்பா பேசினார். அவர்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யலாம் மற்றும் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார். டி.கே.சிவக்குமார் பதவி ஏற்பு விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது எடியூரப்பா அரங்கேற்றும் அரசியல் பழிவாங்கும் செயல் என்று காங்கிரஸ் சித்தராமையா கூறியிருந்தார்.

முன்னாள் முதல்வரும் தற்போது சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா நேற்று மைசூருவுக்கு வந்தார். மைசூரு ரயில் நிலையம் அருகே உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் டி.கே.சிவக்குமாரின் பதவி ஏற்பு விழாவை நடத்துவதற்கு மாநில பா.ஜனதா அரசு அனுமதி வழங்காமல் கீழ்த்தரமான அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது. டி.கே.சிவக்குமாரை காங்கிரஸ் மேலிடம் கர்நாடக காங்கிரஸ் தலைவராக நியமித்து 3 மாதங்கள் ஆகிவிட்டது.

மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் டி.கே.சிவக்குமாரின் பதவி ஏற்பு விழாவை நடத்த முடியவில்லை. ஆனால் தற்போது கர்நாடக மாநிலம் வைரஸ் தொற்றில் இருந்து ஓரளவிற்கு சுதாரித்துக் கொண்டுள்ளது. கொரோனா நோய் தொற்று இல்லாததால் மைசூருவில் டி.கே.சிவக்குமாரின் பதவி ஏற்பு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக முதலமைச்சர் எடியூரப்பாவை சந்தித்து வாய்மொழியாக அனுமதி கேட்டிருந்தோம்.

அதற்கு முதல்-மந்திரி எடியூரப்பா அனுமதி அளிப்பதாக ஒப்புக் கொண்டிருந்தார். பிறகு அரசிடம் கடிதம் மூலமாக அனுமதி கேட்டதற்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்காமல் நிராகரித்துள்ளனர். இது முதல்வர் எடியூரப்பா அரங்கேற்றும் அரசியல் பழிவாங்கும் செயல் அல்லவா? மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு ஒரு சட்டம். நமக்கு ஒரு சட்டமா? என சித்தராமையா கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பதற்கு எந்த வித தடையும் இல்லை என முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Related Stories: