ஓஸ்மான்நகர் ஏரியை ஆக்கிரமித்து தெலுங்கானா முதல்வரின் மகன் பண்ணைவீடு கட்டி உள்ளாரா?

* குழு அமைத்து 2 மாதத்தில் அறிக்கை  

* பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: ஓஸ்மான்நகர் ஏரியை ஆக்கிரமித்து தெலுங்கானா முதல்வரின் மகன் பண்ணை வீடு கட்டி உள்ளாரா? என்பது பற்றி விசாரித்து 2 வாரத்தில் அறிக்கை அளிக்கும்படி தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யும், அம்மாநில காங்கிரஸ் செயல் தலைருவமான அனுமுலா ரேவந்த் ரெட்டி, சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், ‘ தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகனும், அம்மாநில மந்திரியுமான கே.டி.ராமாராவ், தெலுங்கானா மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதியான ஓஸ்மான் சாகர் ஏரியை ஆக்கிரமித்து பண்ணை வீட்டை விஸ்தரித்து உள்ளார். இந்த பகுதி உயிரி வனப்பகுதியாகும். ஐதராபாத் மாநகராட்சியின் குடிநீர் ஆதாரம் நிறைந்த பகுதியாகவும் இருந்து வருகிறது. எனவே, இந்த பண்ணை வீடு கட்டப்பட்டதை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். இதை அகற்ற உத்தரவிட வேண்டும்,’ என்று  கூறியுள்ளார்.இந்த மனு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் விசாரித்து,  நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

ஓஸ்மான்நகர் ஏரியை ஆக்கிரமித்து தெலுங்கானா முதல்வரின் மகன் பண்ணை வீடு கட்டி உள்ளாரா? என்பதை அறிந்து கொள்ள சென்னை மண்டல சுற்றுச்சூழல் துறை அதிகாரி, தெலுங்கானா மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி, பெருநகர ஐதராபாத் மாநகராட்சி ஆணையர், ஐதராபாத் குடிநீர் வழங்கல் துறை, தெலுங்கானா நீர்பாசனத்துறை, ஐதராபாத் ஏரி மற்றும் நீர் ஆதாரங்கள் துறை ஆகிய துறைகளின் கண்காணிப்பு பொறியாளர், ரெங்கா ரெட்டி மாவட்ட கலெக்டர் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு, சம்பந்தப்பட்ட  இடத்தை ஆய்வு செய்து, 2018ம் ஆண்டு பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவு மீறப்பட்டுள்ளதா? ஏதேனும் விதிமீறல் நடந்துள்ளதா? விதிமீறல் இருந்தால் ஏரியை பழைய நிலைக்கு கொண்டு வர என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து  2 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நீர்பிடிப்பு பகுதியில் கட்டுமான பணியை மேற்கொள்ள யார் அனுமதி அளித்தது? என ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: