கொரோனாவால் அடைக்கப்பட்ட 44 ஆயிரம் திருக்கோயில்கள் 6.50 லட்சம் பூ வியாபாரிகள் வாழ்க்கை வாடியது

* பூவால் கிடைத்த வாழ்வு, தொலைந்து போச்சு

* கோயில்களை திறக்க கோரிக்கை

வேலூர்: கொரோனாவால் அடைக்கப்பட்ட 44 ஆயிரம் திருக்கோயில்களால் 6.50 லட்சம் பூ வியாபாரிகள் வாழ்க்கை வாடிய நிலைக்கு மாறியுள்ளது. பூவால் கிடைத்த எங்கள் வாழ்வு தொலைந்து போச்சு, எனவே கோயில்களை திறந்து வாழ்வாதாரம் காக்க வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். உலகையே புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் கொரோனாவின் ஆட்டம் ஓய்ந்தபாடில்லை. உலக அளவில் 56 லட்சத்து 78 ஆயிரத்து 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 லட்சத்து 51 ஆயிரத்து 654 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 666 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 633 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில் 19 ஆயிரத்து 372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 145 பேர் பலியாகியுள்ளனர். இப்படி கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. உயிர்பறிக்கும் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கில், அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு, தற்போது சிலகுறிப்பிட்ட தொழில்கள் தொடங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், பெரும்பாலான தொழில்கள் முழுவீச்சில் தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் அனைத்து வகையான தொழில்களும் முடக்கத்தில் இருந்து மீளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்பினால், தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 44ஆயிரம் திருக்கோயில் நடைகள் அடைக்கப்பட்டன. இக்கோயில்கள் நடை அடைக்கப்பட்டதால், பூக்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் மட்டுமின்றி கோயில்களை மட்டுமே நம்பியிருந்த பூ மற்றும் மாலை தொடுத்து விற்பனை செய்து வந்த தொழில் முற்றிலும் முடங்கிக்கிடக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் கணக்கிட்டால் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் முன்பு மட்டும் சுமார் 4 லட்சம் வியாபாரிகள் உள்ளனர். அதேபோல் இந்த சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாமல் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு சராசரியாக ஒரு மாவட்டத்திற்கு ஆயிரம் கோயில்களில் சுமார் 2 லட்சம் வியாபாரிகள் உள்ளனர். மொத்தம் பூ மற்றும் பூ மாலை விற்பனை செய்யும் வியாபாரிகள் தமிழகத்தில் சுமார் 6.50 லட்சம் பேர் உள்ளனர். கொரோனாவால் கோயில்கள் நடை அடைக்கப்பட்டதால், பொதுமக்கள் யாரும் கோயில்களுக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. பொதுமக்கள் கோயில்களுக்கு வராததால் கோயில்கள் வாசலில் பூக்கடைகள் வைத்திருந்த வியாபாரிகள் 2 மாதங்களுக்கு மேலாக பூ வியாபாரம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  இதில் குறிப்பாக வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில், புரம், செல்லியம்மன் கோயில், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார், படவேடு, பழனி முருகன் கோயில், திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி, மதுரை மீனாட்சியம்மன்,  திருச்சி ரங்கம், சமயபுரம் மாரியம்மன் கோயில்.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன், ஏகாம்பரநாதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் பெரிய கோயில் என்று மேற்கண்ட முக்கிய கோயில்கள் முன்பு மட்டுமே பல ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பூ மாலைகள் கட்டி விற்பனை செய்து வந்தனர். இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிக்கிடக்கிறது.  பூக்களால் கிடைத்த எங்கள் வாழ்வு கொரோனாவால் தொலைந்து போச்சு, எங்கள் வாழ்வில் மீண்டும் மணம் வீச, கட்டுப்பாடுகளை பின்பற்றி கோயில்களை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.   

தோட்டங்களில் பறிக்காமல் காய்ந்த பூக்கள்

கோயில்கள் நடைஅடைப்பு, சுப நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு போன்ற காரணங்களால், பூக்கள் விற்பனை அடியோடி முடங்கியது. இதனால் தமிழகத்தில் பல ஆயிரம் ஏக்கரில் வைக்கப்பட்ட பூந்தோட்டங்களில், பூக்கள் பறிக்காமலேயே வாடி வீணாகி வருகிறது. சில இடங்களில் தோட்டங்களில் பறிக்கப்பட்ட பூக்கள் விற்பனையாகாமல் சாலையோரங்களில் குப்பைகளில் வீசப்பட்டு வருகிறது.  

தேங்காய், பழம் வியாபாரமும் தப்பவில்லை

கோயில்கள் நடை அடைக்கப்பட்டதால் பூக்கள், மாலை வியாபாரம் மட்டும் பாதிக்கப்படவில்லை. தேங்காய், பழம், அர்ச்சனை கூடைகள், சுவாமி படங்கள் விற்பனை, கற்பூரம் விற்பனை என்று ஏராளமான வியாபாரிகள் வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: