கொரோனா பரப்ப பெங்களூரு வந்தியா..?சீன வாலிபரை தாக்கி பணத்தை பறித்த கும்பல் ஓட்டம்

பெங்களூரு, : சீன வாலிபரை வழிமறித்த 5 பேர் கும்பல்  கொரோனாவை பெங்களூருவில்  பரப்ப வந்தியா என்று தாக்கி செல்போன் மற்றும் ரொக்கப்பணத்தை பறித்து  சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்தவர்  ரோஹித். இவர் மேற்கு வங்கமாநிலம் டார்ஜிலிங்கில் வசித்து வந்தார். சில  ஆண்டுகள் அங்கு தொழில் செய்து வந்த இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  பெங்களூரு வந்து சககாரா நகர் பகுதியில் சைனிஸ் உணவு கடை நடத்தி வந்தார். பெங்களூரு  பாதராயணபுராவில் வசித்து வந்த அவரால் கடந்த சில வாரங்கள் ஊரடங்கு காரணமாக  கடையை திறக்க முடியாமல் போனது.

கடந்த வாரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால்,  நீண்ட நாட்களுக்கு பின்னர் கடையை திறந்தார். சம்பவத்தன்று கடைக்கு தேவையான  காய்கறி மற்றும் பொருட்கள் வாங்கி வைத்துவிட்டு, கே.ஆர்புரத்தில் உள்ள  நண்பரை பார்க்க வேண்டுமென்று பைக்கில் சென்றார். கே.ஆர்புரம் மேம்பாலம்  அருகே வந்தபோது, வாலிபர் ஒருவர் இவரை வழிமறித்து லிப்ட் கேட்டார். ரோஹித் அவரை பைக்கில் ஏற்றி சென்றார். சிறிது தூரம் சென்றதும்  ரோஹித்திடம், வீட்டிற்கு பேச வேண்டியுள்ளது. உங்கள் செல்போனை தாருங்கள்  என்று கூறினார். ரோஹித் தனது போனை கொடுத்தார். ஆனால், அந்த போனை அவர்  திரும்ப கொடுக்கவில்லை.

இறுதியாக கே.ஆர்புரம் மற்றும் மகாதேவபுராவிற்கு  இடைப்பட்ட மெட்ரோ மேம்பால பணிகள் நடைபெறும், இடத்தில் பைக்கை  நிறுத்தும்படி கூறினார்.  பைக்கை ரோஹித் நிறுத்தியதும் 4 பேர் கும்பல்  அங்கு வந்தது. அதிர்ச்சி  அடைந்த ரோஹித் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைக்க முயன்றார்.  அதற்குள் அந்த நபர்கள் ரோஹித்திடம், சீனாவில் இருந்து  கொரோனாவை பரப்ப வந்தியா என்று கேட்டு தாக்கினர். பின்னர் கத்தியால்,  பேண்ட் பாக்கெட்டை கிழித்து, மணி பர்சை பறித்தனர்.

அதில் 7 ஆயிரம் பணம்  இருந்தது. அதை எடுத்துக் கொண்ட கும்பல் ரோஹித்தின் கையில் இருக்கும்  மோதிரத்தை பறிப்பதற்காக 2 விரல்களை கத்தியால் கிழித்தனர். ஆனால்,  மோதிரம் வரவில்லை. இறுதியாக ரோஹித்தை அங்கேயே விட்டுவிட்டு, செல்போன்  மற்றும் பறித்த ரொக்கப் பணத்துடன்  தப்பியோடி விட்டனர். இச்சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து, கும்பலை தேடி வருகின்றனர்.

Related Stories: