ஆடும் விதத்தை மாற்றியதால் மூலையில் இருந்து முன்னேறினேன்...ராகுல் சவுத்ரி உற்சாகம்

லக்னோ: பயிற்சியாளரின் ஆலோசனைப்படி ஆடும் விதத்தில் மாற்றம் செய்ததால்  மூலையில் நின்று பிடி வீராக இருந்த நான் பாடிச் செல்லும் வீரராக முன்னேற்றம் கண்டேன் என்று  தமிழ்தலைவாஸ் வீரர்  ராகுல் சவுத்ரி தெரிவித்தார். புரோ கபடி தொடரில்  விளையாடும் தமிழ்  தலைவாஸ் அணி வீரர் ராகுல் சவுத்ரி.  முதல் 6 தொடர்களில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்காக விளையாடியவர், கடந்த  ஆண்டு தமிழ்தலைவாஸ் அணிக்காக விளையாடினார். இதுவரை 122 போட்டிகளில் விளையாடி 1014 புள்ளிகளைக் குவித்துள்ளார். இதில் 955 புள்ளிகள் ரெய்டு மூலமாக அள்ளியவை.பாடிச் செல்லும்போது, வேகமாக ஓடி ஆட்களைத் தொட்டு புள்ளிகளைக் குவிப்பது இவரது தனித்தன்மை.

இப்படி வேகமாக ஓடிச் சென்று எதிரணி வீரர்களை தொட்டு அவுட்டாக்கும் முறைக்கு மாறியது குறித்து ராகுல் கூறியதாவது: நான் கபடி விளையாட ஆரம்பித்த போது   களத்தில் வலது மூலைதான் எனது இடம். தொடக்கத்தில் தற்காப்பு வீரராகத் தான் செயல்பட்டேன். குஜராத், காந்தி நகரில் உள்ள சாய் மையத்தில் பயிற்சி பெற வாய்ப்பு கிடைத்தது. அங்கு  மகிபால் நர்வால், மன்பிரீத் சிங்  என மூத்த வீரர்கள் இருந்தனர். அதனால் எனக்கு சாய் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் ஓரத்தில் உட்கார்ந்து அவர்களின் ஆட்டத்தை கவனிப்பேன்.

மகிபால்  அற்புதமான ஆட்டக்காரர். அவரின் ஆட்டத்தை பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன். எப்படி பாடிச் சென்று புள்ளிகைள சேர்ப்பது என்பதையும் புரிந்து கொண்டேன். அவருக்கு கிடைத்த பாராட்டும், புகழும்  பாடிச் செல்லும் வீரராக மாறினால் எனக்கும் கிடைக்கும் என்பதை உணர்ந்தேன். ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்காமல், பதிலி ஆட்டக்காரராக உட்கார வைக்கப்பட்டு இருந்தாலும் நாம் எப்போதும் உத்வேகத்துடன் இருக்க வேண்டும். பயிற்சியாளர் எப்போது அழைத்தாலும் ஆடத் தயாராக இருக்க வேண்டும்.

அப்படி உட்கார வைக்கப்பட்டு இருந்த நேரத்தில்தான்  எனது பயிற்சியாளர்,  ஓடிச் சென்று புள்ளிகளை சேகரிக்கும் முறையில் விளையாடச் சென்னார்.  அவரது உதவியுடன் படிப்படியாகக் கற்றுக் கொண்டேன். அந்த முறையில் ஆடி புள்ளிகளை சேகரிக்க ஆரம்பித்ததும், அணியிலும் இடம் பிடித்தேன். அதன் பிறகு  பிடி வீரராக  மூலையில் நின்றிருந்த நான் பாடிச் செல்லும் வீரராக முன்னேற்றம் கண்டேன். நான் விளையாட ஆரம்பித்த காலத்தில்,  பயிற்சி பெற இத்தனை தொழில்நுட்ப வசதிகள்,  முன்மாதிரி ஆட்டங்களை பார்க்க  வீடியோ காட்சி வசதிகள் ஏதுமில்லை.

இப்போது இளம் வீரர்களுக்கு எல்லாம் வாய்த்திருக்கிறது. அவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ராகுல் சவுத்ரி தெரிவித்தார். ஸ்டார் ஸ்போர்ட்சில்: பரபரப்பான புரோ கபடி தொடர் இறுதிப் போட்டிகளின் சிறப்பு அம்சங்கள்   ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் மே 24ம் தேதி முதல்  மே 31ம் தேதி வரை  தினமும் காலை 10.30 மணிக்கு ஒளிரப்பாகிறது.

Related Stories: