சூப்பர் புயலாக மாறியது அம்பன்: தமிழகத்துக்கு ஆபத்தில்லை: ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள அம்பன் புயல் மேலும் தீவிரம் அடைந்து சூப்பர் புயலாக மாறியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள அம்பன் புயல் மேலும் தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று அந்த புயல் கடும் புயலாக மாறி மத்திய வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய  தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டது. பின்னர் அது மிக கடும் புயலாக (super cyclone) வலுப்பெற்று வடக்கு மற்றும் வட கிழக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கக் கடற்கரையை நோக்கி நகரும் தன்மை கொண்டதாக மாறியுள்ளது.   இந்த சூப்பர் புயல் நாளை மேற்கு வங்கத்தில் கரை கடக்கும். தற்போது இந்த புயல் சூப்பர் புயலாக வடிவம் கொண்டுள்ளதால், காற்றின் வேகம் மணிக்கு 200 கிமீ வேகத்தை தாண்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக புயல் கரை கடக்கும் போது வலுவிழக்கும் தன்மை கொண்டதாக  இருக்கும். ஆனால் இந்த சூப்பர் புயல் கரை கடக்கும் போதுகூட வலுவிழக்காது என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சூப்பர் புயல் (monster) ஆக மாறியுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதனால் இது 20ம் தேதி வரை வலுவிழப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  மேற்கு வங்கம் நோக்கி இந்த புயல் நகர்வதால் இன்று வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் கடும் சூறாவளி காற்று மணிக்கு 200 முதல் 210 கிமீ வேகத்தில் வீசும். இடையிடையே 230 கிமீ வேகம் வரையும் உச்சமடையும். 20ம் தேதி இந்த புயல் வடக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் கடும் சூறாவளி காற்று மணிக்கு 210 கிமீ வேகத்தில் வீசும். இதனால் கடல் எப்போதும் சீற்றத்துடன் காணப்படும்.

இந்த சூப்பர் புயல் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது., ராமநாதபுரம், கடலூர், மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தது, மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. அதில் அதிகபட்சமாக காரைக்காலில் 80மிமீ மழை பெய்துள்ளது.

துவாக்குடி 60 மிமீ, சேந்தமங்கலம் 50 மிமீ, தம்மம்பட்டி 40 மிமீ, திருச்செங்கோடு,சங்ககிரி, மணப்பாறை, மதுக்கூர், பாம்பன், துறையூர், மோகனூர் 30மிமீ, மழை பெய்துள்ளது. இதுதவிர தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யும்.

Related Stories: