கம்பெனிகள் திவால் சட்டத்தில் திருத்தம் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம்: நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம், கம்பெனிகளின் திவால் சட்டத்தில் திருத்தம், ஆன்லைன் கல்வி உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். கொரோனா தொற்றால் சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த, 20  லட்சம் கோடிக்கான சலுகைகள் அறிவிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி  தெரிவித்திருந்தார். இதன்படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த  13ம் தேதி முதல் இந்த சலுகை திட்டங்களை அறிவித்து வருகிறார். கடைசியாக, 5வது கட்டமாக நேற்று 7 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: வேலை உறுதி திட்டம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.

தற்போது, இதற்கு கூடுதலாக  40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மீண்டும் தங்கள் கிராமங்களுக்கு செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், இத்திட்டத்தில் பதிவு செய்து பலன் பெறலாம். மொத்தமாக 300 கோடி வேலை நாட்கள் உருவாக்க இது உதவியாக இருக்கும். சுகாதார சீர்திருத்தம்: சுகாதாரத்துக்கான பொது செலவினங்கள் அதிகரிக்கப்படும். சுகாதார நிறுவனங்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சுகாதார மற்றும் நல மையங்களை ஏற்படுத்துவது, அனைத்து மாவட்டங்களிலும் தொற்றுநோய் மருத்துவமனை வளாகங்கள் அமைத்தல், அனைத்து மாவட்டங்கள், வட்டார அளவில் ஒருங்கிணைந்த சுகாதார மையங்கள் ஏற்படுத்துதல்,  ஆய்வுகளை ஊக்குவித்தல் போன்றவை மேற்கொள்ளப்படும்.

கல்வி: பிரதமர் இ-வித்யா திட்டத்தின் கீழ், டிஜிட்டல் அல்லது ஆன்லைன் கல்வித்திட்டம் தொடங்கப்படும். இதில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பள்ளிக் கல்விக்கு அனைத்து கிரேடுகளுக்கும் மின்னணு பாடங்கள் மற்றும் கியூஆர் குறியீட்டில் பாடப் புத்தகங்களுக்கு ஒரே நாடு, ஒரே டிஜிட்டல் இணையதளம் உருவாக்கப்படும். 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான ஒவ்வொரு வகுப்புக்கும் டிவி சேனல், பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சிறப்பு திட்டம் கொண்டு வரப்படும். தரவரிசையில் முதல் 100 இடங்களில் உள்ள பல்கலைக் கழகங்கள் வரும் 30ம் தேதியில் இருந்து முன் அனுமதியின்றி ஆன்லைன் கல்வித் திட்டங்களை தொடங்க அனுமதிக்கப்படுவார்கள்.

இதுமட்டுமின்றி, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் மன ஆரோக்கியத்துக்கு உதவும் உளவியல் சார்ந்த சமூக உதவி திட்டம் தொடங்கப்படும். பள்ளிக்கூட, மழலை பருவ குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய தேசிய பாடத் திட்டம் மற்றும் வழிகாட்டி வரையறை வெளியிடப்படும். மின்னணு பாடசாலை திட்டத்தின் கீழ் 200 பாட நூல்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். தொழில் செய்வதை எளிமையாக்குதல்: வெளிநாடுகளில் இந்திய பொது நிறுவனங்களை நேரடியாக சந்தையில் பட்டியலிடுதலை அனுமதிக்கப்படும். சிறிய நிறுவனங்கள், ஒரு நபர் நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த தவறுவதற்கான தண்டனைகளை குறைக்கப்படும்.

திவால் நடவடிக்கை: திவால் நடவடிக்கை எடுப்பதற்கான குறைந்தபட்ச உச்சவரம்பு 1 லட்சத்தில் இருந்து 1 கோடியாக அதிகரிக்கப்படும். திவால் நடவடிக்கைகள் ஓராண்டுக்கு நிறுத்தப்படும். பொதுத்துறை நிறுவனங்கள் கொள்கை: முக்கிய துறைகள் (ஸ்ரேட்டஜிக்) சாராத பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும். முக்கியத்துவம் வாய்ந்த (ஸ்டிராட்டஜிக்) துறைகளில், தனியார் துறையினரும் அனுமதிக்கப்படுவார்கள். முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை ஒன்று முதல் 4 வரை இருக்கும். மற்றவை தனியார் மயமாக்கப்படும் அல்லது மற்ற நிறுவனங்களுடன் இணைக்கப்படும்.

மாநில அரசுகளுக்கு ஆதரவு: மாநில அரசுகளை போன்றே மத்திய அரசுக்கும் பெரிய அளவில் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த ஏப்ரலில் மாநிலங்களுக்கு வரி பகிர்வாக 46,038 கோடி முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் இழப்பு மானியங்கள் 12,390 கோடி, ஏப்ரல் முதல் வாரத்தில் மாநிலங்களின் பேரிடர் நிவாரண முன்பணம் 11,092 கோடி, கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளாக சுகாதார அமைச்சகத்தால் 4,113 கோடி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மாநிலங்கள் கடன் பெறுவதற்கான வரம்பு ஒட்டு மொத்த மாநில உற்பத்தியில் 3%என்ற அடிப்படையில் 6.41 லட்சம் கோடியாக அறிவிக்கப்பட்டது.

இதில் 75 சதவீத தொகை கடந்த மார்ச் மாதமே அங்கீகரிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட கடன் அளவில் 14 சதவீதம் மட்டுமே மாநிலங்கள் பெற்றுள்ளன. 86 சதவீதம் இன்னும் பயன்படுத்தப்படவில்லை.  இருப்பினும், கடன் வரம்பை 3ல் இருந்து 5 சதவீதமாக உயர்த்துமாறு மாநில அரசுகள் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டுக்கு மட்டுமே பொருந்தும், இதன்மூலம், மாநிலங்களுக்கு கூடுதலாக 4.28 லட்சம் கோடி கிடைக்கும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கிராமங்கள் புத்துயிர் பெறும்

பிரதமர் மோடி நேற்றைய டிவிட்டர் பதிவில், ‘நிதி தொகுப்பினால் நாட்டின் கிராமப்புற பொருளாதாரம் புத்துயிர் பெறும். கல்வி, சுகாதாரத் துறைகளில் மாறுதலுக்கான தாக்கத்தை உண்டாக்கும். தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிக்கும்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: