கோஹ்லி… கிரிக்கெட் உலகின் பெடரர்! டிவில்லியர்ஸ் பாராட்டு

புதுடெல்லி: இயற்கையான, இயல்பான ஆட்டத்திறன் கொண்ட  விராட் கோஹ்லி, கிரிக்கெட் உலகின்  ரோஜர் பெடரர் என்று தென் ஆப்ரிக்க வீரர் ஏபி. டிவில்லியர்ஸ் பாராட்டி உள்ளார். தென் ஆப்ரிக்க அணி முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ்.  இவர் கடந்த 9 ஆண்டுகளாக  இந்திய கேப்டன் விராட் கோஹ்லியுடன் இணைந்து ஐபிஎல் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆர்சிபி) அணிக்காக விளையாடி வருகிறார்.  ஆர்சிபி மூலம் இருவரும் நெருக்கமான நண்பர்களாக தொடர்கின்றனர். இந்நிலையில் ஜிம்பாப்வே வர்ணனையாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான பொம்மி ம்பாங்வாவுடன் வில்லியர்ஸ் சமூக ஊடகமொன்றில்   உரையாடினார். அப்போது கோஹ்லி மற்றும் ஆஸ்திரேலிய நட்சத்திரம் ஸ்டீவன் ஸ்மித் இருவரையும் ஒப்பிடும்படி டிவில்லியர்சிடம் பொம்மி கேட்டுக் கொண்டார்.

அப்போது டிவில்லியர்ஸ் கூறியதாவது: கோஹ்லி இயற்கையான ஆட்டக்காரர். பந்துகளை மிக இயல்பாக அடித்து ஆடக்கூடியவர். சுவிஸ் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரரைப் போல கிரிக்கெட்டில் இயல்பான ஆட்டம் என்றால் கோஹ்லி தான். எனவே கிரிக்கெட் உலகின்  ரோஜர் பெடரர் என்று கோஹ்லியை தாராளமாகச் சொல்லலாம்.

அதேபோல்  ஸ்டீவன் ஸ்மித்தை கிரிக்கெட் உலகின் ரபேல் நடால் (ஸ்பெயின்) என்று சொல்லலாம். இருவரும் மனதளவில் உறுதியானவர்கள். இயல்பாக ஆடாவிட்டாலும் ஸ்மித் ரன் குவிப்பதை இலக்காகல் கொண்டு விளையாடுவார். சாதனைகளையும் முறியடிப்பார்.

ஆனால் கோஹ்லி  எங்கு விளையாடினாலும் ரன் குவிப்பார். அவர்தான் என்னுடைய சாய்ஸ். நல்ல நண்பர். கிரிக்கெட் பற்றி மட்டுமல்ல  இன்னும் நிறைய விஷயங்கள் அவரிடம் தெரிந்துகொள்ள இருக்கிறது. அவர் ஒரு சிந்தனையாளர்.  நிறைய பரிசோதனை முயற்சிகளை தயங்காமல் செய்வார். நாங்கள் 90 சதவீத நேரம் கிரிக்கெட்டை தவிர்த்து  மதம் உட்பட மற்ற விஷயங்களை தான் பேசுவோம். எனக்கும் கோஹ்லிக்கும் மட்டுமல்ல பலருக்கும் சச்சின் டெண்டுல்கர்தான் முன் மாதிரி. கிரிக்கெட்டில் எல்லா சாதனைகளையும் சச்சின் படைத்திருக்கிறார். ஆனால் இலக்கை நோக்கி ரன் குவிப்பதில் சச்சினை விட கோஹ்லிதான் சிறந்தவர். அதிலும் நெருக்கடியான நேரத்தில் கோஹ்லி களத்தில் இருந்தால் இலக்கு எத்தனை பெரிதாக இருந்தாலும் கவலையில்லை. இவ்வாறு டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.

Related Stories: