நலிந்த வீரர்கள், நடுவர்களுக்கு கூடைப்பந்து சங்கம் நிதியுதவி

சென்னை: நலிந்த நிலையில் உள்ள கூடைப்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்களுக்கு   தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கூடைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உலகம் முழுவதும் நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலையில் கூடைப்பந்து சங்கம்  தமிழகத்தில் உள்ள வீரர்கள், நடுவர்கள், பயிற்சியாளர்களுக்கு ஆதரவாக இருப்போம்.  அதிலும் கொரோனா தொற்று நோயால் பலரது வாழ்க்கை வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்ற சூழலில், அவர்களது பொருளாதாரத்திற்கு கைகொடுக்கும் வகையில் கூடைப்பந்து சங்கம் சார்பில் 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்.  பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ள மாநில அணி வீரர்கள், யு13,  யு16, யு18 ஆகிய அணி வீரர்களுக்குதேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்க,  கல்விக் கட்டணம் செலுத்த நிதி உதவி செய்யப்படும்.

மாதம் 20 ஆயிரத்துக்கும் குறைவான வருவாய் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தமிழக கூடைப்பந்து வீரர்கள் தேசிய, சர்வதேச, ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக தொடர்ந்து பயிற்சி பெற தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். நீண்ட நாட்கள் பயிற்சி பெறாமல் இருந்தால் வீரர்களின் செயல் திறன் பாதிக்கும். எனவே இந்த வழக்கமான பயிற்சிகள் மேற்கொள்ளும்போது தமிழக அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் செயல்பட  உறுதியாக இருக்கிறோம்.

Related Stories: