சாம்பியன் இத்தாலி சாகசம்

டார்ட்மண்ட்: ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான ‘யுரோ கோப்பை-2024’ கால்பந்து போட்டியில் நேற்று பி பிரிவில் உள்ள நடப்பு சாம்பியன் இத்தாலி, அல்பேனியா அணிகள் மோதின. ஃபிபா உலக தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள இத்தாலியும், 66வது இடத்தில் உள்ள அல்பேனியாவும் மல்லுக்கட்டின. ஆட்டம் முழுவதும் இத்தாலியின் ஆதிக்கமே மேலோங்கி காணப்பட்டது. ஆனால் ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே அல்பேனியாவின் பஜ்ராமி முதல் கோலடித்து அணிக்கு முன்னிலைப் பெற்று தந்தார்.

அதன் பிறகு இத்தாலி வீரர்கள் கூடுதல் வேகம் காட்டி கோலடிக்க முயன்றனர். அதன் விளைவாக ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் பஸ்டோனி, 16வது நிமிடத்தில் பரேல்லா ஆகியோர் அடுத்தடுத்து கோலடித்து அசத்தினர். அதனால் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. அதன் பிறகு 2வது பாதியில் இத்தாலியின் கோலடிக்கும் முயற்சிகளை எல்லாம் அல்பேனிய கோல்கீப்பர் ஸ்ட்ரகோஷா அற்புதமாக தடுத்தார்.

ஆனாலும் இத்தாலி தன் முயற்சிகளை கைவிடாமல் அல்பேனியா கோல் பகுதியை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். கூடவே அல்பேனியாவும் அவ்வப்போது கோலடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் இரண்டு தரப்புக்கும் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதனால் 2வது பாதியில் யாரும் கோலடிக்கவில்லை. எனவே ஆட்டத்தின் முடிவில் நடப்பு சாம்பியன் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இத்தாலியின் ஃபெட்ரிகோ சியசா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

The post சாம்பியன் இத்தாலி சாகசம் appeared first on Dinakaran.

Related Stories: