3.1 ஓவரில் மேட்டர் ஓவர் ஓமனுக்கு எதிராக இங்கிலாந்து சாதனை வெற்றி

நார்த் சவுண்ட்: ஓமன் அணியுடனான பி பிரிவு லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 101 பந்துகள் மீதம் இருக்க வெற்றியை வசப்படுத்தி சாதனை படைத்தது. விவியன் ரிச்சர்ட்ஸ் அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நடப்பு சாம்பியன் இங்கிலாந்து பந்துவீச… ஓமன் அணி 13.2 ஓவரில் வெறும் 47 ரன் மட்டுமே எடுத்து சுருண்டது. அதிகபட்சமாக சோயிப் கான் 11 ரன் எடுத்தார். சக வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 4, ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் தலா 3 விக்கெட் அள்ளினர்.

அடுத்து 20 ஓவரில் 48 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, மொத்த ரன்ரேட்டை உயர்த்தும் முயற்சியாக முதல் பந்தில் இருந்தே அதிரடியில் இறங்கியது. சால்ட் 12 ரன் (3 பந்து, 2 சிக்சர்), வில் ஜாக்ஸ் 5 ரன்னில் பெவிலியன் திரும்பினர். இங்கிலாந்து 3.1 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன் எடுத்து அபாரமாக வென்றது. கேப்டன் ஜோஸ் பட்லர் 24 ரன் (8 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), ஜானி பேர்ஸ்டோ 8 ரன்னுடன் ( 2 பந்து, 2 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நடப்பு தொடரில் பவர் பிளேவிலேயே வெற்றியை வசப்படுத்திய 2வது அணி என்ற பெருமை இங்கிலாந்து அணிக்கு கிடைத்தது. அடில் ரஷித் (4-0-11-4) ஆட்ட நாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து 3 போட்டியில் 3 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உள்ள ஆஸி. ஹாட்ரிக் வெற்றியுடன் ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிட்டது. 2வது இடத்தில் உள்ள ஸ்காட்லாந்து 5புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது (2 வெற்றி, ஒரு ரத்து). இங்கிலாந்து தனது கடைசி ஆட்டத்தில் இன்று நமீபியாவை எதிர்கொள்கிறது. அதில் வென்றால் மட்டும் போதாது! ஸ்காட்லாந்து தனது கடைசி ஆட்டத்தில் ஆஸி.யிடம் தோற்றால் தான் இங்கிலாந்துக்கு சூப்பர்-8 சுற்று வாய்ப்பு கிடைக்கும்.

* இங்கிலாந்து 101 பந்துகளை மீதம் வைத்து பெற்ற வெற்றி, டி20 உலக கோப்பையில் புதிய சாதனையாக அமைந்தது. முன்னதாக, 2014ல் நெதர்லாந்துக்கு எதிராக இலங்கை 90 பந்துகள் எஞ்சியிருக்க வென்றிருந்தது.

The post 3.1 ஓவரில் மேட்டர் ஓவர் ஓமனுக்கு எதிராக இங்கிலாந்து சாதனை வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: