சூப்பர்-8க்கு முன்னேறியது இங்கிலாந்து

நார்த் சவுண்ட்: உலக கோப்பையின் 34வது லீக் ஆட்டத்தில், பி பிரிவு அணிகளான இங்கிலாந்து-நமீபியா அணிகள் மோதின. ஆன்டிகுவாவில் உள்ள நார்த் சவுண்ட் நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் மழை காரணமாக டாஸ் போடவே தாமதமானது. மழை நின்றதும் தலா 11 ஓவர்களை கொண்ட ஆட்டமாக ஆட முடிவு செய்ப்பட்டது. டாஸ் வென்ற நமீபியா பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆனால் மழை காரணமாக ஆட்டம் தொடங்க மீண்டும் தாமதமானது. வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த இங்கிலாந்தை மழை பயமுறுத்தியது.

ஏற்கனவே ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டமும் மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டம் கைவிடப்பட்டால் ஆட்டத்தில் இருந்து வெளியேற வேண்டிய பரிதாப நிலையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து இருந்தது. நமீபியா ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது. மழை நின்றதும் களமிறங்கிய இங்கிலாந்து பவர் பிளே ஓவரான 3ஓவர் முடிவில் பட்லர், சால்ட் என 2விக்கெட்களை இழந்து 18ரன் மட்டுமே எடுத்திருந்தது.

அதன் பிறகு இணை சேர்ந்த பேர்ஸ்டோ, ஹாரி இருவரும் அதிரடியாக விளையாடினர். பேர்ஸ்டோ 31(18பந்து, 3பவுண்டரி, 6சிக்சர்) ரன்னில் ஆட்டமிழந்தார். மழை காரணமாக மீண்டும் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது இங்கிலாந்து 8ஓவரில் 3விக்கெட் இழப்புக்கு 82ரன் எடுத்திருந்தது. மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது ஒரு ஓவர் குறைக்கப்பட்டு தலா 10ஓவர் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது. அதனால் 10ஓவர் முடிவில் இங்கிலாந்து 5விக்கெட் இழப்புக்கு 122ரன் எடுத்திருந்தது.

லிவிங்ஸ்டோன் 47(20பந்து, 4பவுண்டரி, 2சிக்சர்) விளாசி களத்தில் இருந்தார். நமீபியா வீரர்கள் ரூபன் 2, டேவிட், பெர்ணாட் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ஓவர்களின் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்பட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறையில்(டிஎல்எஸ்) நமீபியாவுக்கு வெற்றி இலக்கு 123ரன்னுக்கு பதிலாக 126ரன்னாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனாலும் நம்பிக்கையுடன் களமிறங்கிய நமீபியா வீரர்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அது போதுமானதாக இல்லை.

நமீபியா 10ஓவர் முடிவில் 3விக்கெட்களை இழந்து 84ரன் மட்டுமே எடுத்தது. எனவே இங்கிலாந்து டிஎல்எஸ் முறையில் 41ரன் வித்தியாசத்தில் வென்றது. நமீபியாவின் மைக்கேல் 33(29பந்து, 1பவுண்டரி, 3 சிக்சர்), நிகோலஸ் 18(16பந்து, 1பவுண்டரி, 1சிக்சர்), டேவிட் 27(12பந்து, 2பவுண்டரி, 2 சிக்சர்) ரன் விளாசி ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா, ஜோர்டன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ஆட்ட நாயகனாக ஹாரி புரூக் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து பி பிரிவில் 2வது இடம் பிடித்ததுடன், 2வது அணியாக சூப்பர்-8க்கு முன்னேறியது.

The post சூப்பர்-8க்கு முன்னேறியது இங்கிலாந்து appeared first on Dinakaran.

Related Stories: