முன்னாள் வீரர்கள் நலநிதி கபில்தேவ், கவாஸ்கர் உறுதி

மும்பை: நலிந்த நிலையில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு நிதி உதவி அளிப்போம் என முன்னாள் கேப்டன்கள் கபில்தேவ், கவாஸ்கர்  உறுதி அளித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம்(ஐசிஏ) சார்பில் நலிவடைந்த நிலையில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுமார் 30 பேருக்கு நிதியுதவி அளிக்க  முடிவு செய்துள்ளது. அதற்கு ஐசிஏ சார்பில் 10 லட்சம் உட்பட இதுவரை 39 லட்ச ரூபாயை பல்வேறு தரப்பினர் வழங்கியுள்ளனர். இந்நிலையில், முன்னாள் கேப்டன்கள் கபில்தேவ், கவாஸ்கர் ஆகியோர் தாங்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் நலநிதிக்கு பங்களிப்போம் என்று  உறுதியளித்துள்ளனர். ஆனால் எவ்வளவு தொகை என்பது குறித்து இருவரும் இதுவரை ஏதும் அறிவிக்கவில்லை.

முன்னதாக அசாருதீன், கம்பீர்  ஆகியோரும் நிதி வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்களில் அசாருதீன் ஒரு லட்சம் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோல்  குஜராத்தை சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றும் நிதி உதவி அளிக்க உள்ளது. இப்படி நிதி அளிப்பவர்கள் இம்மாதம் 15ஆம் தேதிக்குள் வழங்க  வேண்டுமென்று ஐசிஏ வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்திய அணியில் விளையாடி கொண்டிருக்கும் எந்த வீரரும் இதுவரை நிதியுதவி  அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐசிஏ-வில் 1750 வீரர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

Related Stories: