ஆட்டிப்படைத்த ஆர்சனல் அணி

லண்டன்: இங்லீஸ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று, ஆர்சனல் அணி அட்டகாசமாக ஆடி, 4-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்டன் வில்லா அணியை வெற்றி வாகை சூடியது. இங்லீஸ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் லண்டனில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் ஆர்சனல் – ஆஸ்டன் வில்லா அணிகள் மோதின. போட்டி துவங்கியது முதல் ஆர்சனல் அணி வீரர்கள் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர். ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் ஆர்சனல் அணியின் கேப்ரியல் மகால்ஹேஸ் அணியின் முதல் கோல் போட்டு அசத்தினார்.

அவரைத் தொடர்ந்து, அந்த அணியின் மார்டின் ஜுபிமென்டி 52வது நிமிடத்திலும், லியான்ட்ரோ ட்ரோசார்ட் 69வது நிமிடத்திலும், கேப்ரியல் ஜீசஸ் 78வது நிமிடத்திலும் கோல்கள் போட்டனர். போட்டியின் இறுதிக் கட்டத்தில் 90+4வது நிமிடத்தில் ஆஸ்டன் வில்லா அணியின் ஒல்லி வாக்கின்ஸ் தனது அணிக்காக முதல் கோல் போட்டார். அதையடுத்து போட்டி முடிவுக்கு வந்ததால், 4-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியை அடுத்து, ஆர்சனல் அணி, 19 போட்டிகளில் 14 வெற்றிகளுடன் 45 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. மேன் சிட்டி 40 புள்ளிகளுடன் 2, ஆஸ்டன் வில்லா 39 புள்ளிகளுடன் 3, லிவர்பூல் அணி 32 புள்ளிகளுடன் 4, செல்ஸீ அணி 30 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளன.

Related Stories: