சில்லிபாயிண்ட்…

* ஃபிடே அமைப்புக்கு எதிராக கிராம்னிக் அவதூறு வழக்கு
மாஸ்கோ: சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் டேனியல் நரோடிட்ஸ்கி (29) மர்மமான முறையில் மரணமடைந்தார். கடைசியாக, இணையதளத்தில் நேரலையில் அவர் பேசிய வீடியோ ஒன்றில், ரஷ்ய கிராண்ட் மாஸ்டர் விளாடிமிர் கிராம்னிக் கூறிய குற்றச்சாட்டுகளால் கடும் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறியிருந்தார். அதையடுத்து, அந்த சம்பவம் தொடர்பாக கிராம்னிக்கிடம் விசாரணை நடத்தப்படும் என, உலக செஸ் நிர்வாக அமைப்பான ஃபிடே கூறியிருந்தது. இந்நிலையில், ஃபிடே அமைப்பு மீது, சுவிட்சர்லாந்து சிவில் நீதிமன்றத்தில் கிராம்னிக் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

* முழங்காலில் காயம் ஓய்வில் எம்பாபே
பாரிஸ்: ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக, பிரான்சை சேர்ந்த கைலியன் எம்பாபே திகழ்கிறார். அவர் சமீப காலமாக முழங்காலில் காயத்துடன் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரது காலில் செய்யப்பட்ட எம்ஆர்ஐ பரிசோதனையில் முழங்காலின் உள்பக்கத்தில் புண் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அதற்காக உடனடி சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்றும், அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இதையடுத்து அடுத்த 3 வாரங்கள் எந்த போட்டியிலும் எம்பாபேவால் ஆட முடியாது என தகவல் வெளியாகி உள்ளது. ரியல் மாட்ரிட் அணிக்காக சமீபத்தில் நடந்த போட்டிகளில் எம்பாபே 29 கோல்கள் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* ஆடுகளத்தில் மீண்டும் கில்
புதுடெல்லி: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் அணி கேப்டனாக உள்ள சுப்மன் கில், ஆஸ்திரேலியா அணியுடனான போட்டியின்போது கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் அதன் பின் நடந்த பல போட்டிகளில் ஆட முடியாமல் போனது. பின் தென் ஆப்ரிக்கா அணியுடன் நடந்த போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்பட்ட சுப்மன் கில், ரன் எடுக்க முடியாமல் சொதப்பினார். அதனால், தென் ஆப்ரிக்காவுடன் நடந்த கடைசி இரு டி20 போட்டிகளில் கில்லுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்நிலையில், விஜய் ஹசாரே கோப்பைக்காக நடக்கும் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக, வரும் 3ம் தேதி சிக்கிம், 6ம் தேதி கோவா அணிகளுக்கு எதிராக சுப்மன் கில் ஆடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: