கேப்டவுன்: எஸ்ஏ20 கிரிக்கெட் போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணியை, 85 ரன் வித்தியாசத்தில் பிரிடோரியா கேபிடல்ஸ் அணி அபாரமாக வென்றுள்ளது. எஸ்ஏ20 கிரிக்கெட் போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கேப்டவுனில் நடந்த போட்டியில் பிரிடோரியா கேபிடல்ஸ் – எம்ஐ கேப்டவுன் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய பிரிடோரியா அணியின் துவக்க வீரர் பிரைஸ் பார்சன்ஸ் ரன் எடுக்காமலும், மற்றொரு வீரர் 22 ரன்னிலும் வீழ்ந்து ஏமாற்றம் தந்தனர். அடுத்து வந்த ஷாய் ஹோப் அட்டகாசமாக ஆடி 30 பந்துகளில் 45 ரன் விளாசினார். பின் வந்தோரில் விஹான் லூபே 60, டெவால்ட் புரூவிஸ் 36, ஷெர்பேன் ரூதர்போர்ட் 47 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
20 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன் குவித்தது. அதையடுத்து, 221 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் எம்ஐ கேப்டவுன் அணி களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ராஸி வான்டெர் தூசன் (28 ரன்), ரையான் ரிக்கெல்டன் (33 ரன்), முதல் விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்து நல்ல துவக்கம் தந்தனர்.
இருப்பினும் பின் வந்த வீரர்கள் சொதப்பலாக ஆடியதால் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன. 14.2 ஓவரில் எம்ஐ கேப்டவுன் அணி, 135 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட்டானது. அதனால், 85 ரன் வித்தியாசத்தில் பிரிடோரியா அணி மகத்தான வெற்றியை பதிவு செய்தது. பிரிடோரியா அணி தரப்பில் ரூதர்போர்ட் 4, கேசவ் மகராஜ் 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
