துபாய்: ‘பேட்டில் ஆப் செக்சஸ்’ போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா வீரர் நிக் கிர்கியோசை பழிவாங்குவேன் என சபதம் செய்துள்ளார் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை அரீனா சபலென்கா. பெலாரசை சேர்ந்தவர், உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை அரீனா சபலென்கா (27). சமீபத்தில் துபாயில், ‘பேட்டில் ஆப் செக்சஸ்’ என்ற பெயரில் நடந்த கண்காட்சி போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர் நிக் கிர்கியோஸ் (வயது 30, ஏடிபி ரேங்கிங் – 1286) உடன் மோதினார்.
டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய அந்த போட்டியில் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய கிர்கியோஸ், 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடினார். அந்த போட்டியில், ஒரு ஆண் வீரரும், பெண் வீராங்கனையும் மோதியதால் விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது டென்னிஸ் ஆர்வலர்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், அரீனா சபலென்கா அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது:
கிர்கியோசுடன் மீண்டும் களத்தில் மோத தயாராக உள்ளேன். இம்முறை கண்டிப்பாக நான் வெற்றி பெறுவேன். எனக்கு பழிவாங்குவது என்றால் மிகவும் பிடிக்கும். எதையும் சாதாரணமாக விட்டுக் கொடுத்து போக முடியாது. அடுத்த போட்டியில், புதிய விதிமுறைகளுடன் கிர்கியோசை களத்தில் சந்திப்பேன் என நினைக்கிறேன். பேட்டில் ஆப் செக்சஸ் போன்ற கண்காட்சி போட்டிகள் சுவாரசியம் மிக்கவை. டென்னிஸில் இதுபோன்ற போட்டிகள் நடத்துவதை அவசியம் என கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
