கடின உழைப்பால் எங்களுக்கு பெருமை கிடைத்துள்ளது; “2025 மிகச்சிறப்பாக அமைந்தது”- கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டி

 

திருவனந்தபுரம்: இந்தியா-இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையே 5போட்டி கொண்ட டி.20 தொடரின் முதல் 4 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் 5வது மற்றும் கடைசி போட்டி நேற்றிரவு திருவனந்தபுரத்தில் நடந்தது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 68 (43பந்து), அருந்ததி ரெட்டி 27 ரன் (11பந்து) அடித்தனர். பின்னர் களம் இறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீராங்கனை ஹாசினி பெரேரா 42 பந்தில் 65, இமேஷா துலானி 50 ரன் எடுத்த நிலையில் மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினர். 20 ஓவரில் இலங்கை 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களே எடுத்தது.

இதனால் 15 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. மேலும் 5-0 என தொடரை கைப்பற்றி இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது. இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் ஆட்டநாயகி விருதும், ஷபாலி வர்மா தொடர் நாயகி (241ரன்) விருதும் பெற்றனர். வெற்றிக்கு பின் ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது: ”2025 எங்களுக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. நாங்கள் செய்த அனைத்து கடின உழைப்புக்கும், இந்த ஆண்டு எங்களுக்குப் பெருமை கிடைத்துள்ளது. இந்தத் தொடரைப் பார்த்து, எதிர்காலத்தில் நாம் என்ன செய்ய முடியும் என்று சிந்திக்க விரும்புகிறோம். ஒரு பேட்ஸ்மேனாக, அந்த வரிசைக்கு பலம் கொடுத்து பங்களிப்பது எனது பொறுப்பு. ஒருநாள் போட்டியிலிருந்து டி20க்கு மாறுவது எளிதானது அல்ல, ஆனால் அனைவரும் விளையாட உற்சாகமாக இருந்தனர். இதற்காக நாங்கள் போராடினோம், எல்லாம் ஒன்றாக வந்ததில் மகிழ்ச்சி.

அடுத்து மகளிர் ஐபிஎல், இது நம் அனைவருக்கும் முக்கியமானது. நாங்கள் எங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி மகிழ்வோம் என்று நம்புகிறோம். அடுத்த 6 மாதங்கள் முக்கியம், தொடர்ந்து கடினமாக உழைத்து தரத்தை உயர்த்த விரும்புகிறோம்.”, என்றார். இலங்கை கேப்டன் சாமரி அட்டப்பட்டு கூறுகையில், ”நாங்கள் எங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. எங்கள் பவர்-ஹிட்டிங் மற்றும் பேட்டிங்கை மேம்படுத்த வேண்டும். அடுத்த சில மாதங்களில் சிறந்த கிரிக்கெட்டை விளையாட ஆவலுடன் காத்திருக்கிறோம். டி20 உலகக் கோப்பைக்கு முன் நிறைய சிந்திக்க வேண்டும். நாங்கள் இந்தியாவுக்கு சவால் கொடுத்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக தோற்றோம்.” என்றார்.

ஒருநாள் போட்டிக்கும் திரும்பி வருவேன் !
தொடர் நாயகி ஷபாலி வர்மா: ”இந்த ஆண்டு முழுவதும் எனது உழைப்பு பலனளித்துள்ளது. சில நேரங்களில் உழைத்த அனைத்தும் பலனளிக்கும், சில நேரங்களில் பத்து விஷயங்களில் 5 பலனளிக்கும். நான் இன்னும் கடினமாக உழைத்து அடுத்த முறை (ஒருநாள் போட்டிக்கும்) திரும்பி வருவேன். டி20 எனக்கு மிகவும் பிடித்தமானது, நாளுக்கு நாள் நான் முன்னேறி வருகிறேன், மேலும் அணிக்கு சிறந்த வீராங்கனையாக மாறுவேன்.” என்றார்.

பிட்ஸ்.. பிட்ஸ்….
* டி.20 கிரிக்கெட்டில் தீப்தி ஷர்மா 152 விக்கெட் எடுத்து முதலிடத்திற்கு முன்னேறினார். இவர் 134 போட்டியில் ஆடி உள்ளார். ஆஸ்திரேலியாவின் மேகன் ஷுட் 123 போட்டியில் 151 ரன் எடுத்துள்ளார்.
* டி.20போட்டியில் ஹர்மன்பிரீத் 12வது முறையாக ஆட்ட நாயகி விருது பெற்று மித்தாலி ராஜை சமன் செய்துள்ளார். ஷபாலி, மந்தனா தலா 8 முறை இந்த விருது பெற்றுள்ளனர்.
* ஒரு அணிக்கு எதிராக மகளிர் டி.20ல் அதிக வெற்றி பெற்றதில் ஆஸி. முதலிடத்தில் உள்ளது. அந்த அணி நியூசிலாந்துக்கு எதிராக 33ல் வென்றுள்ளது. இங்கிலாந்து நியூசிலாந்துக்கு எதிராக 32, ஆஸி. இந்தியாவுக்கு எதிராக 26ல் வென்றுள்ளது. இந்தியா இலங்கைக்கு எதிராக 25ல் வெற்றியுடன் 4வது இடத்தில் உள்ளது.
* டி.20ல் இந்தியா 3வது முறையாக எதிரணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது. இதற்கு முன் 2019ல் வெஸ்ட்இண்டீஸ், கடந்த ஆண்டு வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது.

Related Stories: