ராஜ்கோட்: ஆர்யன் ஜுயலின் அதிரடி ஆட்டத்தால், 58 ரன் வித்தியாசத்தில் அசாம் அணியை உத்தரப்பிரதேசம் அணி வெற்றி வாகை கண்டது. விஜய் ஹசாரே கோப்பைக்காக, ராஜ்கோட்டில் நேற்று நடந்த போட்டியில் உத்தரப்பிரதேசம் – அசாம் அணிகள் மோதின. முதலில் ஆடிய அசாம் அணியின் துவக்க வீரர்கள் பிரத்யுன் சைகியா 13, சவுரவ் திஹிங்கியா 15 ரன் எடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்வந்த கேப்டன் சுமித் காதிகவோன்கர் அட்டகாசமாக ஆடி 86 பந்துகளில் 3 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் விளாசினார்.
அடுத்து வந்த சிப்சங்கர் ராய் 82, தேனிஷ் தாஸ் 14, ஸ்வரூபம் பர்கயஸ்தா 22 ரன் எடுத்தனர். 48.4 ஓவரில் அசாம் அணி 308 ரன் குவித்து ஆல் அவுட்டானது. உத்தரப்பிரதேசம் தரப்பில், விப்ரஜ் நிகாம் 4, ஜீசன் அன்சாரி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அதன் பின் உத்தரப்பிரதேசம் அணி ஆடியபோது இடையில் மழை குறுக்கிட்டதால் 42 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டு, 291 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. உத்தரப்பிரதேசம் அணியின் துவக்க வீரர் அபிஷேக் கோஸ்வாமி 24 ரன் எடுத்திருந்தபோது காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார்.
மற்றொரு துவக்க வீரர் ஆர்யன் ஜுயல் புயலாய் மாறி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 140 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்சர், 15 பவுண்டரிகளுடன் 150 ரன்கள் விளாசினார். துருவ் ஜுரெல் 17, பிரியம் கார்க் 52, கேப்டன் ரிங்கு சிங் 15 பந்துகளில் 37 ரன்கள் குவித்தனர். அதனால், 42 ஓவரில் உத்தரப்பிரதேசம் அணி 2 விக்கெட் மட்டுமே இழந்து 291 ரன் குவித்து, 58 ரன் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. 150 ரன் விளாசிய ஆர்யன் ஜுயல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
