கார்ல்சன் சாம்பியன்: 9 முறை பட்டம் வென்று சாதனை; அர்ஜுன் எரிகைசிக்கு வெண்கலம்

தோஹா: உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன் 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். கத்தாரின் தோஹா நகரில் உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டிகள் நடந்து வந்தன. ஏற்கனவே முடிந்த உலக ரேபிட் செஸ் போட்டியில் நார்வேயை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து நடந்த உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் லீக் சுற்று போட்டிகளில் பல சறுக்கல்களை சந்தித்தபோதும் ஒரு வழியாக சமாளித்து செமிபைனல்ஸ் போட்டிக்கு முன்னேறினார்.

பின்னர், அமெரிக்காவின் பேபியானோ கரவுனாவுடன் நடந்த அரை இறுதிப் போட்டியில் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்ற கார்ல்சன், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரை இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துஸட்டோரோவ், இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசியை, 2.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அதைத் தொடர்ந்து நேற்று நடந்த இறுதிப் போட்டியில் கார்ல்சன்-அப்துஸட்டோரோவ் மோதினர். முதல் 3 சுற்றுகள் டிராவில் முடிந்ததால், இருவரும் தலா 1.5 புள்ளிகள் பெற்று சம நிலையில் இருந்தனர். அதன் பின் நடந்த 4வது சுற்றிலும் யாருக்கு வெற்றி எனத் தெரியாத வகையில் போட்டி விறுவிறுப்பாக அமைந்தது.

அந்த சமயத்தில் டிரா செய்ய கார்ல்சன் ஒப்புக் கொள்ளவில்லை. கடைசியில் போட்டியை தன் வசம் கொண்டு வந்த கார்ல்சன் இறுதியில் அந்த சுற்றில் வெற்றி கண்டார். அதனால், 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்ற அவர் சாம்பியன் பட்டத்தை 9வது முறையாக கைப்பற்றி சாதனை படைத்தார். இப்போட்டியில் இந்திய வீரர் எரிகைசிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இதன் மூலம், உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில், ஓபன் பிரிவில், விஸ்வநாதன் ஆனந்திற்கு பின் வெண்கலம் வென்ற 2வது இந்திய வீரர் என்ற பெருமையை எரிகைசி பெற்றார். வெண்கலம் வென்ற எரிகைசிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related Stories: