கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனை கொரோனா வார்டில் பெண் சாவு: சடலம் தர டாக்டர்கள் மறுப்பு

திருப்போரூர்: சென்னை பாலவாக்கம், பசும்பொன் தெருவை சேர்ந்தவர் அகமத்துல்லா. வேன் டிரைவர். இவரது மனைவி தில்சாத் பேகம் (54). கடந்த சில நாட்களாக தில்சாத் பேகம், காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டார். அவருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்களும் இருந்தது.

இதையடுத்து, அவர் 22ம் தேதி இரவு கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கொரோனா வார்டில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். பின்னர் அவரது ரத்தம், சளி, சிறுநீர் ஆகியவை பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தில்சாத் பேகம், சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலை கணவர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது. பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட அவரது ரத்தம், சளி ஆகியவற்றில் கொரோனா தொற்று இருக்கிறதா என முடிவு வந்த பிறகே சடலத்தை கொடுப்பது குறித்து முடிவு செய்ய முடியும் என கூறிவிட்டது.

தம்பதிக்கு சிகிச்சை

கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் கல்பாக்கம் பகுதியை சேர்ந்த தம்பதி, கொரோனா அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களது ரத்தம், சளி, சிறுநீர் ஆகியவை பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பிறகே கொரோனா உள்ளதா என்பது தெரியவரும்.

Related Stories: