சாலையில் கிடந்த 43,000 உரியவரிடம் ஒப்படைப்பு: இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு

பெரம்பூர்: பெரவள்ளூர் காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளராக பணிபுரிந்து வரும் வேலுமணி, நேற்று காலை வழக்கம்போல்  காவல் நிலையம் வந்து கொண்டிருந்தார். அப்போது, அயனாவரம் ரயில்வே காலனி சாலையில் பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அதை திறந்து  பார்த்தபோது, 43 ஆயிரத்து 200 ரூபாய், தொலைபேசி எண், வங்கி புத்தகம் உள்ளிட்டவை இருந்தது. அதில், இருந்த தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பேசியபோது,  அந்த பை வில்லிவாக்கம் அகத்தியர் தெருவை சேர்ந்த பெவின் (35) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

இதனையடுத்து, அவரை காவல் நிலையம் வரவழைத்து, அவரிடம் உரிய விசாரணை நடத்தி அந்த பணத்தை ஒப்படைத்தார். இதுகுறித்து பையை தவறவிட்ட பெவின் கூறுகையில், ‘இருசக்கர வாகனம் பக்கவாட்டில் பையை மாட்டி எடுத்து சென்றதால், அது விழுந்தது தெரியவில்லை. போலீசாரின் உதவி இந்த இக்கட்டான காலகட்டத்தில் போற்றுதலுக்குரியது. அவர்களுக்கு எனது நன்றி மற்றும் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

Related Stories: