கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயினில் கால்பந்து வீரர் உயிரிழப்பு: கார்சியா மறைவுக்கு அட்லெடிகோ போர்டா அல்டா கிளப் இரங்கல்

மாட்ரிட்: கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயினில் கால்பந்து வீரர் உயிரிழந்துள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்த நிலையில், தற்போது வைரஸ் பரவல் ஐரோப்பாவை மையங்கொண்டுள்ளது. அதனால், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,100ஐ தாண்டியது. ஸ்பெயின் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சனி மற்றும் ஞாயிறு இரு நாட்களில் மட்டும் 2000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 100 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 297-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ்  பாதிப்பால் ஸ்பெயின் கிளப் கால்பந்து பயிற்சியாளரும் வீரருமான, பிரான்சிஸ்கோ கார்சியா (21), கொரோனா உயிரிழந்துள்ளார். ஸ்பெயினை சேர்ந்த 21 வயதான பிரான்சிஸ்கோ கார்சியா அங்குள்ள அட்லெடிகோ போர்டா அல்டா கிளப்பில் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அவர் கொரோனா வைரசால் பாதிப்படைந்திருந்தார். முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் ஏற்கனவே தீவிர புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு அட்லெடிகோ போர்டா அல்டா கிளப் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் இது மிகவும் துரதிருஷ்டவசமானது எனவும் அனுதாபம் தெரிவித்துள்ளது.

Related Stories: