காஸ் நிரப்பும் நிலையம் தொடங்க போலீஸ் கமிஷனர் பெயரில் போலி சான்றிதழ்: ஐகோர்ட்டில் அரசு தரப்பு பகீர் தகவல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டீபன் டென்னிஸ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சைதாப்பேட்டை, சின்னமலையில் என் வீட்டிற்கு அருகே 2 கிரவுண்ட் காலி மனை உள்ளது. அங்கு, தனியார் சார்பில் வாகனங்களுக்கு காஸ் நிரப்பும் நிலையம் தொடங்க உள்ளனர். இந்த இடத்துக்கு அருகே அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனை உள்ளிட்டவை உள்ளன. எந்த ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இந்த காஸ் நிலையம் அமைய உள்ளது. இதற்கு சென்னை போலீஸ் கமிஷனர் கடந்த 2017ம் ஆண்டு தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளார்.

இந்த சான்றிதழை வழங்குவதற்கு முன்பு இந்த பகுதியை போலீஸ் கமிஷனர் நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை. இதேபோல், மராட்டிய மாநிலம், நாக்பூரில் உள்ள வெடி மருந்து தலைமை கட்டுப்பாட்டாளரும் இதற்கு உரிமம் வழங்கியுள்ளார். எனவே, இந்த தடையில்லா சான்றிதழ் மற்றும் உரிமத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் வி.சண்முகசுந்தர்  ‘இதேபோல மயிலாப்பூர் பகுதியில் காஸ் நிலையம் தொடங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

அப்போது போலீஸ் கமிஷனர் வழங்கியதாக கூறப்பட்ட தடையில்லா சான்றிதழ் போலியானது என்றும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. எனவே, இந்த தடையில்லா சான்றிதழும் போலியானது’ என்ற பகீர் தகவலை கூறினார். பின்னர், இதுகுறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: