டெல்லி வன்முறையை தடுக்க தவறிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய கோரிக்கை: சோனியா தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் ஜனாதிபதியிடம் மனு

புதுடெல்லி: டெல்லி வன்முறை தொடர்பாக நடவடிக்கை எடுக்க தவறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ராஜினாமா செய்ய உத்தரவிடக் கோரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சித் தலைவர்கள்  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து நேற்று மனு அளித்தனர்.டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள், நாடு முழுவதும்  அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. மேலும் வன்முறைக்கு  பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து நேற்று முன்தினம் நடத்தப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் வன்முறை சம்பவம் தொடர்பாக விரைவில் ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுக்க உள்ளதாகவும் சோனியா காந்தி  நிருபர்கள் சந்திப்பின்போது  தெரிவித்து இருந்தார். இந்நிலையில்,  சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம்நபி ஆசாத் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆகியோர் கூட்டாக சென்று நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை அவரது மாளிகையில் சந்தித்தனர்.

டெல்லி  வன்முறை சம்பவங்கள் தொடர்பான கோரிக்கை மனுவை அவரிடம் கொடுத்தனர்.ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு பின்னர் நிருபர்களை சோனியா காந்தி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 4 நாட்களாக டெல்லியில் வன்முறை சம்பவங்கள் தலைவிரித்தாடி வருகிறது. இதில் மத்திய, மாநில அரசுகள் பதற்றத்தை தணிப்பதற்கு பதிலாக, நடக்கும் சம்பவத்தை வேடிக்கை பார்த்து வருகின்றன. மேலும் நடக்கும் வன்முறையில்  200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 35க்கும் மேல் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது.வன்முறையைக் கட்டுப்படுத்த இயலாத மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை உடனடியாக பதவி விலக மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் தெரிவித்து அதற்கான மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.தேசிய அவமானம்:  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறும்போது, “தலைநகரில் அமைதி நிலவுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மேலும் டெல்லியில் கடந்த 4 நாட்களாக நடந்த சம்பவம் மிகுந்த கவலையான ஒன்றாகும். இது தேசிய  அவமானம்.

மேலும் மத்திய அரசின் ஒட்டுமொத்த தோல்வியின் பிரதிபலிப்பை இந்த நிகழ்வு காண்பிக்கிறது. அதனால் ராஜதர்மத்தை மத்திய அரசுக்கு நினைவூட்டுமாறு ஜனாதிபதியிடம் காங்கிரஸ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது’’ என்றார்

Related Stories: