இடமாற்றம் செய்ய எதிர்ப்பு: மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி திடீர் ராஜினாமா: வழக்கறிஞர்கள் அதிர்ச்சி

மும்பை: தன்னை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி எஸ்.சி.தர்மாதிகாரி நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.  மும்பை உயர் நீதிமன்றத்தின் 2வது மூத்த நீதிபதியாக இருப்பவர் எஸ்.சி.தர்மாதிகாரி. இந்த நீதிமன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர் மேத்யூ நெடும்பாரா, நேற்று நீதிபதி தர்மாதிகாரியை அணுகி அடுத்த வாரம் விசாரணை நடத்தக்கோரும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அப்போது, “நான் என் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். இன்றுதான் எனக்கு கடைசி நாள்,” என்று நீதிபதி தர்மாதிகாரி திடீரென கூறினார். இதைக் கேட்டு வழக்கறிஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.   நீதிபதி தர்மாதிகாரி கடந்த 2003, நவம்பர் 14ம் தேதி மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ராஜினாமா குறித்து நீதிபதி தர்மாதிகாரி கூறுகையில், ‘‘என்னை வேறு ஒரு மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், நான் மும்பையில் இருந்து வெளி மாநிலத்துக்கு செல்ல விரும்பவில்லை. என்னை மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக அவர்களுக்கு விருப்பம் இல்லை.  அதே நேரம், எனது சில தனிப்பட்ட மற்றும் குடும்ப காரணங்களுக்காக நான் இங்கிருந்து வேறு மாநிலத்துக்கு செல்ல விரும்பவில்லை. அதனால், எனது ராஜினாமா கடிதத்தை வியாழக்கிமை மாலையே ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து விட்டேன்,’’ என்றார். இவருடைய பணிக்காலம் 2022ல் முடிகிறது.

Related Stories: