அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கறார் வசூல் ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட்: தஞ்சையில் அதிகாரிகள் அதிரடி

தஞ்சை: டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய காலதாமதம் ஏற்படுவதாகவும், மூட்டை ஒன்றுக்கு ரூ.40 வரை கட்டாய வசூல் செய்யப்படுவதால் நாள் ஒன்றுக்கு 500 முதல் 750 வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது என்றும் விவசாயிகள் புகார் கூறி வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை தஞ்சை மாவட்டத்தில் சூரக்கோட்டை, மடிகை உள்ளிட்ட 184 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் சுதாதேவி, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சை முதுநிலை மண்டல மேலாளர் கதிரேசன் ஆகியோர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

விவசாயிகளிடம் இருந்து உரிய முறையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா, கட்டாய வசூல் செய்யப்படுகிறதா, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு 24 மணி நேரத்தில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. 2வது நாளாக நேற்று காலை சூரக்கோட்டை, மடிகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒவ்வொரு நேரடி கொள்முதல் நிலையங்களிலும் 4அதிகாரிகள் வீதம் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனை மாலை வரையிலும் நீடித்தது. விவசாயிகளிடம் கட்டாய வசூல் செய்யப்பட்டதும் மற்றும் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஊழியர்கள் 7 பேரை சஸ்பெண்ட் செய்து தஞ்சை முதுநிலை மண்டல மேலாளர் கதிரேசன் உத்தரவிட்டார்.

Related Stories: