தோண்டத் தோண்ட புதையல் போல டிஎன்பிசியில் தொடரும் கைது; குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது

சென்னை; குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 3 பேரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளது. ஏற்கனவே 5 பேரை கைது செய்துள்ள நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமை செயலக ஊழியர் திருஞானசம்பந்தம், காஞ்சிபுர மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் வடிவு மற்றும் ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது. இதில் மாடு மேய்த்தவர் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இதுவே டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்து அம்பலமானதற்கு காரணமாக இருந்தது. இதில் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். மோசடி மன்னன் ஜெயகுமார், போலீஸ் எஸ்ஐ சித்தாண்டி ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி தமிழக அரசின் 41 துறைகளின் காலியாக உள்ள 1953 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2ஏ தேர்வு நடந்தது.

இத்தேர்வை 5.53 லட்சம் பட்டதாரிகள் எழுதினர். தொடர்ந்து 2018ம் ஆண்டு மார்ச்சில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. குரூப் 2ஏ தேர்வு என்பது நேர்முக தேர்வு அல்லாத பதவியாகும். அதாவது குரூப் 2 ஏ தேர்வுக்கு முதல் நிலை தேர்வில் வெற்றிபெற்றால் மட்டுமே போதும். அவ்வாறு தேர்வு ெபற்றவர்களுக்கு உடனடியாக பதவிகள் வழங்கப்படும். இதனால் இத்தேர்வை போட்டி போட்டு கொண்டு அதிகளவில் தேர்வு எழுதுவது வழக்கம். இந்த நிலையில் தான் மெகா மோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியானது. அதாவது ஏற்கனவே குரூப் 4 தேர்வில் குற்றச்சாற்றுக்குள்ளான ராமேஸ்வரம் மையத்தில், குரூப் 2ஏ தேர்வு எழுதிய 37 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்தனர்.

இதை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கொடுத்த புகாரின் படி சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் தலைமறைவாக உள்ள மோசடி மன்னன் ஜெயகுமார் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் கைது நடவடிக்கையில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், உதவி ஆய்வாளர் சித்தாண்டி சகோதரன் வேல்முருகன், மற்றும் சித்தாண்டி நண்பர் காவலர் முத்துவின் மனைவி ஜெயராணி ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் மோசடியாக வெற்றி பெற்ற முக்கிய குற்றவாளியான ஜெயகுமார் கார் டிரைவரான கொரட்டூரை சேர்ந்த சம்பத் மனைவி சுதாதேவி வெற்றி பெற்று தற்போது திருவண்ணாமாலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளராகவும், அதேபோல், சென்னை தலைமை செயலகத்தில் உள்துறையில் உதவியாளராகவும் பணியாற்றி வந்த திருவிக நகரை சேர்ந்த விக்னேஷ்,  தூத்துக்குடியை சேர்ந்த அரசு ஊழியரான சுதா என்பவரையும் சிபிசிஐடி போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் மேலும் 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமை செயலக ஊழியர் திருஞானசம்பந்தம், காஞ்சிபுர மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் வடிவு மற்றும் ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: