ஐரோப்பிய யூனியனில் சிஏஏ எதிர்ப்பு வாக்கெடுப்பு மோடி பயணம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டதா? வெளியுறவுத் துறை விளக்கம்

புதுடெல்லி: இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் 5 எம்பி.க்கள் குழு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதன் மீது நேற்று ஓட்டெடுப்பு நடப்பதாக இருந்தது.    இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற தலைவர் டேவிட் மரியாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பை ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் மார்ச் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது. இது இந்தியாவின் தூதரக அளவிலான பேச்சுவார்த்தைக்கு கிடைத்த வெற்றி என கூறப்படுகிறது. பிரதமர் மோடி மார்ச் மாதம் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸ் செல்கிறார். இதுவும் ஒத்திவைப்புக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று அளித்த பேட்டி: சிஏஏ என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இது ஜனநாயக முறைப்படி சட்டமாக்கப்பட்டது. இது குறித்து ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள், நாடாளுமன்றம் மற்றும் இதர அமைப்பினருடன் நாங்கள் தொடர்ந்து பேசுவோம். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான ஹூபெய் மாகாணத்தில் 600 இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்கள் இந்தியா வர விரும்புகிறார்களா? என கேட்டுள்ளோம். அங்கு இந்தியர்கள் யாருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எந்த உறுதியான தகவலும் இல்லை. அமெரிக்க அதிபரின் இந்திய பயணம் குறித்து பேசி வருகிறோம் என்றார்.

Related Stories: