இவிஎம்மில் முறைகேடு கண்டுபிடிப்பது எப்படி வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கவனத்திற்கு…: கபில் சிபல் எம்.பி. வெளியிட்ட வழிமுறைகள்

புதுடெல்லி: வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருக்கிறதா? இல்லையா என்பதை கண்டறிவது எப்படி என்பதற்கான வழிமுறைகளை வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்காக கபில் சிபல் எம்.பி வெளியிட்டுள்ளார்.
மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஆளும் பாஜவுக்கு சாதகமாக முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பி வருகின்றன. ஆனால், இவிஎம் இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது என்ற ஒற்றை வரி பதிலையே தேர்தல் ஆணையம் தொடர்ந்து சொல்லியபடி உள்ளது. இந்த நிலையில், மாநிலங்களவை சுயேச்சை எம்.பி கபில் சிபல் வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்களின் வசதிக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்ததா இல்லையா என்பதை சரிபார்க்கும் வழி முறைகளை நேற்று டெல்லியில் வெளியிட்டார். இது குறித்து கபில் சிபல் கூறியதாவது: ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இவிஎம்களை திறந்தவுடன் வாக்கும் எண்ணிக்கை முகவர்கள், வேட்பாளர்கள் என்ன செய்ய வேண்டும் விளக்கமாக கூறுகிறேன். முகவர்கள் வசதிக்காக ஒரு விளக்கப்படம் தயாரித்துள்ளேன். அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் (கட்டுப்பாட்டு அலகு) எண், பேலட் யூனிட் (வாக்குப்பெட்டி) எண் மற்றும் விவிபேட் ஐடி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். அடுத்ததாக இயந்திரம் திறக்கப்படும் நேரத்தை குறிப்பிடப் வேண்டும். இந்த நேரத்தில் ஏதேனும் வித்தியாசம் இருந்தால், இயந்திரம் ஏற்கனவே எங்காவது திறக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறியலாம். இந்த சரிபார்ப்பு முடியும் வரை ரிசல்ட் பட்டனை அழுத்த அதிகாரிகளை அனுமதிக்க கூடாது.
கட்டுப்பாட்டுப் அலகின் வரிசை எண்ணும் எழுத்து வடிவில் வரும். இதை வாக்கு எண்ணிக்கை முகவர்கள் சரி பார்க்க வேண்டும். மொத்தம் பதிவான வாக்குகள் விவரத்தை கவனமாக குறித்துக் கொள்ள வேண்டும். வேட்பாளர்வாரியாக வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு அதன் கூட்டுத் தொகையும், பதிவான வாக்குகள் விவரத்தையும் சரி பார்க்க வேண்டும். இவ்வாறு கபில் சிபல் கூறினார்.

 

The post இவிஎம்மில் முறைகேடு கண்டுபிடிப்பது எப்படி வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கவனத்திற்கு…: கபில் சிபல் எம்.பி. வெளியிட்ட வழிமுறைகள் appeared first on Dinakaran.

Related Stories: