இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கப் பார்க்கின்றனர்: எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு

மிர்சாபூர்: ‘‘மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பை மாற்றி எழுதுவார்கள். இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கப் பார்க்கின்றனர்’’ என இந்தியா கூட்டணி மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர், கோசி, பன்ஸ்கோயன் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: இந்தியா கூட்டணியின் பெரிய சதி குறித்து எச்சரிப்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன். அவர்கள் 3 சதித்திட்டங்களை தீட்டி உள்ளனர். முதலாவது, இந்தியாவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பை மாற்றி எழுத திட்டமிட்டுள்ளனர். அடுத்ததாக, எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவார்கள். மூன்றாவதாக, மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு முழு இடஒதுக்கீட்டையும் அளிப்பார்கள். ஓபிசி இடஒதுக்கீட்டை முற்றிலும் அபகரித்து இதை செய்ய திட்டமிட்டுள்ளார்கள். சமாஜ்வாடியும், காங்கிரசும் பெரும்பான்மை சமூகத்தை நாட்டின் இரண்டாம் தர குடிமக்களாக்கப் பார்க்கின்றனர். கடந்த 2012 சட்டப்பேரவை தேர்தலின் போது சமாஜ்வாடியில் தேர்தல் அறிக்கையில், தலித்களுக்கு அம்பேத்கர் வழங்கிய இடஒதுக்கீட்டுக்கு இணையாக முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் என தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இங்கு பூர்வாஞ்சல் பகுதியை பின்தங்கிய நிலையில் வைத்திருப்பதற்கு காரணம் சமாஜ்வாடி தான். அவர்கள் ஆட்சியில் மாபியா கும்பல்கள் இங்கு நிலத்தை அபகரித்தனர். வீடுகளுக்கு தீ வைத்தனர். அத்தகையவர்கள் இங்கு மீண்டும் கால் வைக்க அனுமதிக்கக் கூடாது. சமாஜ்வாடி ஆட்சியில் பிடிபட்ட தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டனர், அவர்களை பிடித்த போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சமாஜ்வாடி ஆட்சியில் மக்களை பயத்தில் வைத்திருந்தனர், ஆனால் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சியில் மாபியாக்கள் பயந்து நடுங்குகின்றனர். இதே போல காங்கிரஸ், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை சிறுபான்மை நிறுவனங்களாக அறிவித்து ஒரே இரவில் சட்டத்தை மாற்றியது.

இதன் மூலம், ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்களை சிறுபான்மை நிறுவனங்களாக அறிவித்தனர். அங்கு எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு முற்றிலுமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, முஸ்லிம்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு கிடைத்தது. தலித், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினரின் மகன்கள், மகள்களுக்கு இதைவிட பெரிய துரோகம் என்ன இருக்க முடியும்? சமாஜ்வாடி, காங்கிரஸ் அரசு இந்தியாவில் அமைய வேண்டுமென எல்லை தாண்டிய ஜிகாதிகள் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் நடந்து வரும் பொதுத் தேர்தலை முழு உலகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தியா எவ்வளவு பலம்மிக்க அரசைத் தேர்ந்தெடுக்கிறதோ, அவ்வளவு சக்தி வாய்ந்த பிரதமரைப் பெறும். அதன் எதிரொலி உலகின் ஒவ்வொரு நாட்டிலும் ஒலிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

 

The post இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கப் பார்க்கின்றனர்: எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: