ஒர்க் ஃப்ரம் ஹோம் தெரியும் ஒர்க் ஃப்ரம் ஜெயில் பற்றி கேள்விப்பட்டதே இல்லை: கெஜ்ரிவால் பற்றி ராஜ்நாத் சிங் கிண்டல்

சண்டிகர்: “வீட்டில் இருந்து பணியாற்றுவது பற்றி தெரியும். ஆனால் சிறையில் இருந்து பணியாற்றுவது பற்றி இதுவரை கேள்விபட்டதே இல்லை என ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார். பஞ்சாப்பின் ஃபதேபூர் சாஹிப் தொகுதியில் பாஜ வேட்பாளராக கெஜ்ஜா ராம் வால்மீகி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு திரட்டும் விதமாக கன்னா பகுதியில் நடந்த கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், “டெல்லியில் ஆம் ஆத்மி அரசு நடத்துகிறது. முதல்வர் கெஜ்ரிவால் மதுபான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். சிறையில் இருந்தே பணியாற்றுவேன் என்று சொல்கிறார். வீட்டில் இருந்து பணியாற்றுவது பற்றி கேள்விப்பட்டுள்ளேன். சிறையில் இருந்து பணியாற்றுவது பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். எந்தவொரு அரசியல் கட்சி தலைவரும் குற்றச்சாட்டை எதிர்கொண்டால், குற்றச்சாட்டில் இருந்து விடுபடும் வரை பதவியை ராஜினாமா செய்யும் தார்மீக தைரியம் ஒவ்வொரு தலைவருக்கும் இருக்க வேண்டும்.

அதுதான் அறநெறி” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், “அன்னா ஹசாரேவுடன் சேர்ந்து போராட்டம் நடத்தியபோது காங்கிரசின் ஊழலுக்கு எதிரான இயக்கம் ஆத் ஆத்மி, ஆம் ஆத்மி அதன் கொள்கைகள், வெற்றியை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தாது என்று கூறியது. நான் முதல்வரானால் அரசு விடுதியில் வசிக்க மாட்டேன் என கெஜ்ரிவால் சொன்னார். ஆனால் முதல்வரானவுடன் அரசு பங்களாவுக்கு போன கெஜ்ரிவால் அதை சீரமைக்க பொதுபணத்தை பயன்படுத்தினார். ஆம் ஆத்மி பெண் எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் கெஜ்ரிவால் 15 நாட்களுக்கு அமைதியாக இருந்தார்” என்று குற்றம்சாட்டினார்.

 

The post ஒர்க் ஃப்ரம் ஹோம் தெரியும் ஒர்க் ஃப்ரம் ஜெயில் பற்றி கேள்விப்பட்டதே இல்லை: கெஜ்ரிவால் பற்றி ராஜ்நாத் சிங் கிண்டல் appeared first on Dinakaran.

Related Stories: