பொன்.மாணிக்கவேல் மீது காதர்பாட்ஷா அவமதிப்பு வழக்கு அனைத்து ஆவணங்களையும் ஜன.27க்குள் தாக்கல் செய்ய வேண்டும் : உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: சிலை கடத்தல் வழக்கில் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக காதர் பாஷா தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரும் 27ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிலை கடத்தல் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட அந்த பிரிவின் முன்னாள் டி.எஸ்.பி. காதர் பாட்ஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார். அதில், “இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய மனு மீதான வீடியோ கான்பரன்சிங் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே தன்னை கைது செய்து விட்டனர். இது சட்டப்படி தவறாகும். எனவே சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக காதர் பாட்ஷா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘‘இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் காதர் பாட்ஷா தாக்கல் செய்த முன்ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை தொடர்பான ஆவணங்கள், அதேபோல் அவர் காவல் நிலையத்துக்கு நேரில் சென்று கையெழுத்து இடுவதிலிருந்து விலக்கு கோரி தாக்கல் செய்த மனு, மற்றும் அது மீதான விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரும் 27ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதை தவிர காதர் பாட்ஷா முன்ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மற்றும் வீடியோ கான்பரன்சிங் விசாரணை நடந்த பதிவுகளையும் ஒப்படைக்க வேண்டும்’’ என உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக பாதுகாக்கப்படும் ஆவணங்கள் இல்லை என்றோ, காணாமல் போய்விட்டது என்றோ எப்படி கூற முடியும் என சரமாரி கேள்வி எழுப்பியதோடு கடும் கண்டனத்தையும் தெரிவித்தார்.

Related Stories: