வருமானத்தை மறைத்த வழக்கு: கார்த்தி சிதம்பரம் மற்றும் மனைவி ஸ்ரீநிதியை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு

சென்னை: வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் கடந்த 2015-2016 -ஆம் ஆண்டுக்கான காலக்கட்டத்தில் தாக்கல் செய்த வருமானவரி கணக்கில், முட்டுக்காடு என்ற இடத்தில் விற்பனை செய்யப்பட்ட நிலத்தின் மூலம் கிடைத்த ரூ.1.35 கோடி வருவாயைக் கணக்கில் காட்டவில்லை எனக்கூறி கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை எழும்பூர் பொருளாதார குற்றத்தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

பின்னர், இந்த வழக்கு விசாரணை எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால், இந்த வழக்கின் விசாரணையை மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வருமான வரித்துறை இந்த வழக்கைத் தொடரும் போது மனுதாரர் மக்களவை உறுப்பினராக இல்லை. மனுதாரர் கடந்த மே மாதம் தான் அவர் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எனவே மனுதாரர் மீதான வழக்கின் விசாரணையை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது தவறு. இந்த வழக்கை மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். மேலும் அதுவரை இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வருமான வரித்துறை தரப்பில் தங்கள் வழக்கு தொடர ஆதாரமாக இருந்த ஆவணங்கள் முன்வைக்கப்பட்டு, இருவரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன், இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளார். மேலும் இருவர் மீதான குற்றச்சாட்டு பதிவு நடைமுறையை தொடங்க வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 21க்கு ஒத்திவைத்தார். மேலும் அன்றையதினம் இருவரும் ஆஜராகாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: