ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பு: ஊராட்சி தலைவர் தேர்வுக்கு வாக்குச்சீட்டுகளுடன் தேர்தல்... வேடிக்கை பார்த்த போலீசார்

ராமேஸ்வரம்: தங்கச்சிமடத்தில் ஊராட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களை தேர்ந்தெடுக்க, வாக்குச்சீட்டுடன் தேர்வு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை துவக்கத்தில் கண்டுகொள்ளாத ேபாலீசார், உயரதிகாரிகள் உத்தரவிட்டதை தொடர்ந்து அவசரம் அவசரமாக அனைவரையும் வெளியேற்றினர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கட்சிகள் சார்பிலும், பொதுச்சேவையில் ஈடுபட்டு வரும் பெண்களும் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்தனர். தங்கச்சிமடம் பகுதியில் வசிக்கும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த பல பெண்கள், தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய முன்வந்தனர். ஆனால், குறிப்பிட்ட ஒரு பெண் தவிர்த்து, மற்றவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மீறி வேட்புமனு தாக்கல் செய்தால் பிரச்னை செய்வதாகவும், குறிப்பிட்ட நபர்களால் மிரட்டல் விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் வேட்புமனு தாக்கல் செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. கடந்த 2 நாட்களாக இது தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. எனவே இதுகுறித்து வருவாய் மற்றும் காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் நால்வர் போட்டியிட்ட நிலையில், நேற்று தங்கச்சிமடத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமுதாய ஊராட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றது. காலை 10 மணி முதல் வாக்களிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை 8 மணிக்கெல்லாம் வாக்குப்பதிவு துவங்கியது. ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜென்சி, லோவியா தெரஸ், குயின்மேரி, ரெஜி ஆகிய 4 பெண்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். இவர்களது புகைப்படங்களுடன் வாக்குச்சீட்டு அச்சடிக்கப்பட்டது.

நேற்று காலை தங்கச்சிமடம் சூசையப்பர்பட்டினம் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் போட்டியிடும் 4 பெண்களின் புகைப்படம் ஒட்டப்பட்ட நான்கு சில்வர் பாத்திரங்கள் வைக்கப்பட்டன. தொடர்ந்து 8 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு குடும்பத்திற்கு ஒருவர் வீதம் வந்து வாக்குச்சீட்டு பெற்று ஓட்டளித்து சென்றனர். குறிப்பிட்ட நபருக்கு வாக்களிப்பதற்கு இரவோடு இரவாக வீடுதோறும் பணம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்தும் தங்கச்சிமடம் போலீசார் முதலில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயரதிகாரிகளுக்கு புகார் சென்ற நிலையில் வேறு வழியின்றி காலை 10 மணியளவில் தேர்தல் நடைபெற்ற மண்டபத்துக்கு சென்ற ராமேஸ்வரம் தாசில்தார் சந்திரன், டிஎஸ்பி மகேஷ் மற்றும் போலீசார் தேர்தலை தடுத்து நிறுத்தினர்.

அங்கிருந்தவர்கள் அனைவரையும் வெளியேற்றி மகாலை பூட்டினர். வெளியேறியவர்கள் வாக்குச்சீட்டு, புகைப்படம் ஒட்டப்பட்ட பாத்திரங்களையும் கையோடு எடுத்துச் சென்று விட்டனர். ராமநாதபுரம் அருகே சுமைதாங்கி கிராமத்தில் நேற்று முன்தினம் இதேபோல வாக்குப்பதிவு நடந்த நிலையில், தங்கச்சிமடத்திலும் தேர்தல் மூலம் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவரை தேர்ந்தெடுக்க முயன்ற சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: