மணப்பாறை அரசு மருத்துவமனையில் 1.50 லட்சத்துக்கு குழந்தை விற்பனை: வாங்கிய, விற்ற தம்பதிகள் பெண் புரோக்கர் அதிரடி கைது

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனையில் குழந்தை பேரம் பேசி விற்கப்பட்டதாக திருச்சி சைல்டுலைனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர்கள் கடந்த 2 நாட்களாக மருத்துவமனையில் ரகசியமாக விசாரணை  நடத்தினர். விசாரணையில், கடந்த சில தினங்களுக்கு முன் விராலிமலை முருக்கன்குடியை சேர்ந்த முருகேசன் என்பவரின் ஆண் குழந்தை விபத்தில் இறந்து விட்டதால் வேறு குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தார். அதன்படி, தனக்கு  பழக்கமான குழந்தைகள் விற்கும் பெண் புரோக்கர் அந்தோணியம்மாளை (65) அணுகினார்.  பிறந்து 27 நாட்களான ஆண் குழந்தையின் தாயிடம் 1லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம் தருவதாக ேபரம் பேசியுள்ளனர். அந்த குழந்தையை மணப்பாறை  முனியப்பன் கோயில் முன் வைத்து 20 பத்திரம் வாங்கி அதில் குழந்தையை கொடுத்த நபரும், தத்து எடுத்த நபரும் கைரேகை மற்றும் கையெழுத்து பெற்றுக்கொண்டு குழந்தையை கைமாற்றி கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் அந்தோணியம்மாளுக்கு 20 ஆயிரம் தரப்பட்டுள்ளது. இதேபோல 3வது, 4வது பிரசவத்துக்கு வரும் பெண்களை குறிவைத்து,  ஆசைவார்த்தை கூறி பணத்துக்கு குழந்தைகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இந்த  சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு போலீசில் சைல்டு லைன் புகார் கொடுத்தது. இதற்கிடையே, மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கணவருடன் அந்தோணியம்மாள் வந்ததை தலைமை மருத்துவர்  முத்துகார்த்திகேயன்  மணப்பாறை போலீசுக்கு ரகசிய தகவல் அளித்தார்.  இதன்பேரில், இன்ஸ்பெக்டர் முத்துகுமார் மற்றும் போலீசார் சென்று அந்தோணியம்மாளை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில்,  அந்தோணியம்மாளுக்கு மணப்பாறை பாரதியார் நகரை சேர்ந்த ஏழை தம்பதியான செல்வம்- விஜயாவுக்கு பிறந்த 3வது ஆண் குழந்தையைதான் முருகேசன்-ராமாயி தம்பதியிடம் பணத்துக்காக விற்றுள்ளார்.

அரசு ஆஸ்பத்திரி எதிரே செல்வம் டீக்கடை வைத்திருந்தபோது அந்தோணியம்மாள் அடிக்கடி சென்றுள்ளார். இந்த அறிமுகத்தால், கடந்த சில நாட்களுக்கு முன் செல்வம், தங்களுக்கு உடல் நலம் சரியில்லாததால் குழந்தையை பராமரிக்க  முடியவில்லை என அந்தோணியம்மாளிடம் கூறியுள்ளார். இதை பயன்படுத்தி அவர், முருகேசனிடம் பேரம் பேசியுள்ளார். இதில் செல்வத்திடம் 1 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம் தருவதாக பேசி வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து,  அந்தோணியம்மாள் மற்றும் குழந்தையை விற்ற தம்பதி, வாங்கிய தம்பதி என 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: