திப்பு ஜெயந்தி விழா ரத்து முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கர்நாடகாவில் அரசின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தி வந்த திப்பு ஜெயந்தி விழாவை ரத்து செய்து, முதல்வர் எடியூரப்பா அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதை ரத்து செய்யக்கோரி திப்பு சுல்தான்  யுனைடெட் பிரண்ட் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல்  செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அபய் சீனிவாஸ்  ஒகா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசின் சார்பில் வாதிட்ட தலைமை வக்கீல்  பிரபுலிங்க நாவட்கி, ‘‘திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவால் பொது அமைதி  சீர்குலைந்தது. மீண்டும் அதுபோன்ற தவறு நடக்கக் கூடாது என்பதால், அரசின்  சார்பில் நடத்தும் விழா ரத்து செய்யப்பட்டது. தனியார் அமைப்புகள் விழா  நடத்த தடையில்லை’’ என்றார்.

 மனுதாரரின் வக்கீல் வாதிடுகையில், ‘‘மாநில அரசின் சார்பில் 28  மகான்களின் பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடப்படுகிறது.  அதில், திப்பு ஜெயந்தி விழாவை மட்டும் அரசு ரத்து செய்துள்ளதின்  பின்னணியில் உள்நோக்கம் உள்ளது. திப்பு குறிப்பிட்ட வகுப்பை  சேர்ந்தவர் என்பதற்காக, ஜெயந்தி விழா ரத்து செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.இருதரப்பு  வாதங்களை கேட்ட பிறகு  தலைமை நீதிபதி, ‘‘அவசரப்பட்டு அரசு இம்முடிவை எடுத்துள்ளதோ என்று  நினைக்க தோன்றுகிறது. மாநிலத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களுக்கும்  உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட வேண்டுமானால், திப்பு ஜெயந்தி விழாவை ரத்து  செய்து பிறப்பித்துள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கு 2  மாதம் அவகாசம் தருகிறோம். மேலும், நவ.10ம் தேதி தனியார்  அமைப்புகள் இந்த விழாவை நடத்தினால் அரசு அதை தடுக்காமல் முழு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்,’’ என்றார்.பின்னர், விசாரணையை 2020, ஜனவரிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories: